முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற தீர்மானம்

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஜெயலலிதா ஆணைக்களுக்கிணங்க அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.00 மணியளவில் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் மாநில அவைத்தலைவர் ஆர்.வி.சிவா தலைமையிலும், கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம், அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடும்ப அரசியல், ஊழல், பொய் பிரச்சாரம், தேர்தலில் தில்லு முல்லு, பணபலம் ஆகியவற்றை நம்பியிருந்த மைனாரிட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத வகையில் விரட்டி அடித்த வீராங்கனை சிங்க நிகர் தலைவி, கழக நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தமிழகத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றதற்கு கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் சார்பில் வாழ்த்த வயதில்லை. தங்கள் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறோம்.

ஜெயலலிதா தமிழக முதல்வராக 3-வது முறையாக அறுதி பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்த தமிழக வாக்காள பெருமக்களுக்கும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கடுமையாக உழைத்த கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு.

மத்திய அரசு, கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 6 மாதத்தில் பலமுறை பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலையை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வின் பலனாக தினந்தோறும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த டீசல் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி வலியுறுத்தி கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை 30 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தியமைக்கும் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் கடுமையான கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மத்திய அரசு இந்த காப்பீட்டுத் தொகையை உடனடியாக குறைக்கவில்லை என்றால் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா அனுமதி பெற்று மாநிலம் தழுவிய ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் 1.8.11 முதல் 30.9.11 வரை 2 மாதங்களுக்கு தீவிர உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம்களை மாவட்டம் தோறும் நடத்தி ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியிலும், கழகத்திலும் சேர்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வையும் சாலை விதிகளையும் ஓட்டுநர்களும் பொதுமக்களும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில், பேருந்து நிலையங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நேரில் சென்று ஓட்டுநர்களுக்கும் பொது மக்களுக்கு துண்டுபிரசாரம் மூலம் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகளும் தொண்டர்களும், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரவு பகல் பாராமல் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்துவதற்கும் கழக வேற்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் எவ்வாறு பாடுபட்டார்களோ, அதே வகையில் உள்ளாட்சி தேர்தலிலும் தன்னலம் கருதாது கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாககளும் தொண்டர்களும் கழக வேட்பாளர்களும் கூட்டணி கட்சி வேட்பாலர்களும் வெற்றி பெற பாடுபடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்