முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.29 - லஞ்சம்,ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர் கொண்டுவரப்படவில்லை. நாட்டில் லஞ்ச ஊழல் தலைவரித்தாடுகிறது. இதை ஒழிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனையொட்டி நடந்த பேச்சுவார்த்தையில் வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு சம்மதித்தது. லோக்பால் மசோதாவுக்கான வரைவு மசோதாவை தயாரிக்க மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் அரசு பிரதிநிதிகள் 5 பேரும் சிவில் உறுப்பினர்கள் 5 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அரசு பிரதிநிதிகள் தனியாகவும் சிவில் பிரதிநிதிகள் தனியாகவும் லோக்பால் வரைவு மசோதாவை தயாரித்து உள்ளனர். லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும் என்று அண்ணாஹசரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு அரசு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு ஆதரவு அளிக்கும்படி பாரதிய ஜனதா உள்பட பல முக்கிய கட்சி தலைவர்களை அண்ணா ஹசரே சந்தித்து கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர்களையும் ஹசரே சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு தரப்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் மற்றும் நீதிபதிகள் உட்படுத்தப்படவில்லை. கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அம்பிகா சோனி, லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பின்னர், தலைவர் மற்றும் 8 பேர் கொண்ட லோக்பால் அமைப்பு அமைக்கப்படும். இந்த அமைப்புக்கு பதவியில் இருக்கும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியோ அல்லது ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியோ தலைவராக இருப்பார் என்றார். மேலும் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள். லோக்பால் அமைப்பில் 50 சதவீதம் பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டை அந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்தால் அதை லோக்பால் அமைப்பு ஏற்றுக்கொள்ளாது. விசாரிக்கவும் செய்யாது. உயரதிகாரிகளுக்கும் லோக்பால் வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவர் பதவி விலகிய பின்னரே விசாரிக்க முடியும். அனைத்து மாநிலங்களிலும் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும்படி பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதுவார். லோக்பாலில் திருத்தம் செய்யப்பட்டால் அதை பாராளுமன்றமே செய்யும். லோக்பால் மசோதா திட்டமிட்டபடி வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் சோனி மேலும் கூறினார்.  

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமியும் இதுகுறித்து  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் லோக்பால் மசோதா வரம்புக்குள் வர பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார். ஆனால் இதுபற்றி கூட்டத்தில் விரிவான முறையில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் இறுதியில் பிரதமரை இந்த மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவருவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. நீதிபதிகளும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றார். அதேசமயத்தில் பிரதமரும்,நீதிபதிகளும் பதவி விலகிய பின்னர் லோக்பால் மசோதா வரம்புக்குள் வருவார்கள். முன்னாள் பிரதமர்களும் லோக்பால் வரம்புக்குள் வருவார்கள் என்றும் நாராயாணசாமி மேலும் கூறினார். 

இதற்கிடையில் லோக்பால் வரைவு மசோதாவுக்கு அண்ணா ஹசரே சிபாரிசு செய்திருந்த அனைத்து பரிந்துரைகளும் கேபினட் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் அரசின் லோக்பால் வரைவு மசோதாவை சிவில் கமிட்டி உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர். அரசு சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் வரைவு மசோதா ஊழலை ஒழிக்க உதவாது என்று சிவில் கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது. அரசு தயாரித்துள்ள வரைவு மசோதாவானது உதவாக்கரையானது. இது ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற மக்களின் ஆசையை பூர்த்தி செய்யாது என்று சிவில் கமிட்டியில் உறுப்பினராக உள்ள கிரண் பேடி கூறினார். இதனால் வருகின்ற ஆகஸ்ட் 16-ம் தேதி அண்ணா ஹசரே மீண்டும் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கப்போவது உறுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்