முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி. வழக்கு ஆ.ராசாவின் கட்டளைகளைத்தான் நிறைவேற்றினேன்: சந்தோலியா வாதம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஙீஜூலை- 30 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா நேற்று சி.பி.ஐ. நீதிபதி முன்னிலையில் தனது வாதத்தை எடுத்துவைத்தார். அப்போது கூறிய அவர், நான் ஒரு அப்பாவி. ராசா என்னுடைய மாஸ்டராக இருந்தார். அந்த மாஸ்டரின் கட்டளைகளைத்தான் நான் நிறைவேற்றினேன். மற்றபடி நான் ஒரு அப்பாவி என்று வாதிட்டார். ஆனாலும் இவருடைய ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை  அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி லஞ்சப்பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.பி.யும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிந்ததே. இந்த வழக்கில் ராசாவின் முன்னாள் அந்தரங்க செயலாளர் ஆர்.கே.சந்தோலியா உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 2 ம் தேதி சந்தோலியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது பெயரும் சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 3 வது குற்றப்பத்திரிகை ஆகஸ்ட் மாத வாக்கில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வாதாடியது தெரிந்ததே. அப்போது அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் எல்லாம் தெரியும் என்று முதலில் தெரிவித்தார். ஆனால் மறுநாளே இருவரையும் நான் குற்றம்சாட்டவில்லை என்று ஆ.ராசா பல்டி அடித்தார். பிறகு இவரது உதவியாளர் சித்தார்த்த பெகூரா கோர்ட்டில் ஆஜராகி தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கெஞ்சினார். நான் ஒரு அதிகாரி அவ்வளவுதான். வேறொன்றும் தெரியாது என்பதுபோல பெகூரா வாதாடினார்.
இந்நிலையில் ஆ.ராசாவின் முன்னாள் அந்தரங்க செயலாளர் ஆர்.கே.சந்தோலியாவும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு  நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் ஆஜராகி தனது வாதத்தை எடுத்துவைத்தார். இந்த வழக்கில் தான் ஒரு அப்பாவி என்று அவர் கூறிக்கொண்டார். முன்னாள் அமைச்சர் ராசா என்னுடைய மாஸ்டர். அந்த மாஸ்டரின் கட்டளைகளைத்தான் நான் நிறைவேற்றினேன். நான் ஒரு அதிகாரி. அவருடைய அன்றாட பணியில் உதவி செய்தேன். அவ்வளவுதான். இது எப்படி குற்றமாகும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார் சந்தோலியா. தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதையும் சந்தோலியா கடுமையாக எதிர்த்தார். நான் ராசாவின் உதவியாளர். அதுவும் நவீன உதவியாளர். என்னுடைய மாஸ்டரின் உத்தரவுகளை நான் நிறைவேற்றினேன். ஒரு மாஸ்டரை எப்படி நான் கேள்வி கேட்க முடியும்? அவருக்கு உதவி செய்ததற்காக என்னை இந்த வழக்கில் சிக்கவைப்பதா? என்று சி.பி.ஐ. க்கு கடும் கண்டனம் தெரிவித்தார் ஆர்.கே.சந்தோலியா. நான் தி.மு.க.வைச் சேர்ந்தவன் அல்ல. கலைஞர் டி.வி.யுடனும் எனக்கு தொடர்பில்லை. வேறு எந்த தொலைத் தொடர்பு கம்பெனியுடனும் எனக்கு தொடர்பு கிடையாது. நான் சி.பி.ஐ.க்கு ஒரு சவால் விடுகிறேன். நான் ஏதேனும் கையெழுத்திட்டதாக ஒரு ஆதாரத்தையாவது அவர்களால் சாட்சியாக காட்ட முடியுமா? என்று தன்னுடைய வாதத்தின் கடைசிக் கட்டத்தில் ஆர்.கே.சந்தோலியா சி.பி.ஐ.க்கு சவால் விடுத்தார். தன்னை இடைக்கால ஜாமீனில் விடவேண்டும் என்றும் அவர் வாதாடினார். டெல்லி சிறப்பு போலீசிடம் இருந்து சி.பி.ஐ. உரிய அனுமதி பெறவில்லை. ஆகவே எனக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது. எனவே என்னை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அனுமதியே பெறாமல் என்னிடம் விசாரணை நடத்துகிறார்கள் என்றும் சந்தோலியா வாதிட்டார். இத்தனையும் கேட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, இறுதியில் உங்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது  என்று ஒரு வரியில் கூறி ஆர்.கே.சந்தோலியாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இப்படியாக 2 ஜி.ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சுவாரஸ்யமான வாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்