முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கசாப் அப்பீல்

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை - 30 - தனது மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளான். கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பயங்கர தாக்குதலை நடத்தினர். இந்தியா மட்டுமல்லாமல் உலகையே அதிர்ச்சி அடைய வைத்த  இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலை நடத்திய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல்கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். இந்த தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்போடு, பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அஹமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நீண்டகாலமாக நடைபெற்றுவந்த இந்த மும்பை தாக்குதல் வழக்கில் கடந்த ஆண்டு மும்பை சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. அதன்படி மும்பை தாக்குதலில் 3 உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை அஜ்மல் கசாப் சுட்டுக்கொன்றது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவன் குற்றவாளி என்றும், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால் இந்த வழக்கில் இருந்து பாஹிம் அன்சாரி, சபாபுதீன் அஹமது ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் கசாப் அப்பீல் மனு தாக்கல் செய்தான். இதேபோல இந்த வழக்கில் அன்சாரி, அஹமது ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மஹாராஷ்ட்ரா போலீசார் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த இரு அப்பீல் மனுக்கள் மீதும் விசாரணை நடத்திய மும்பை ஐகோர்ட்டு, கடந்த பிப்ரவரி 21 ம் தேதி தனது தீர்ப்பை அளித்தது. அப்துல் கசாப் குற்றவாளி என்றும் அவனுக்கு மரண தண்டனை விதித்தது செல்லும் என்றும் ஐகோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதேபோல அன்சாரி, அஹமது ஆகியோரை வழக்கில் இருந்து விடுதலை செய்ததும் சரிதான் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தனது மரண தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து நேற்று அஜ்மல் கசாப் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளான். தான் சிறைவாசம் அனுபவிக்கும் ஆர்தர்ரோடு சிறையில் இருந்தபடியே கசாப் தனது அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு டைரக்டர் ஜெனரலுக்கு நேரடியாக அனுப்பியுள்ளான். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு டைரக்டர் ஜெனரல் பெற்றுக்கொண்டார். இந்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதிவாளரின் பரிசீலனைக்கு பிறகு இந்த மனு நம்பர் இடப்பட்டு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நேரத்தில் இவ்வழக்கில் அன்சாரி, அஹமது ஆகிய இருவரின் விடுதலையை எதிர்த்து மஹாராஷ்ட்ர அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்