முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூலை.- 31 - பாரதிய ஜனதா மேலிட கட்டளைக்கு முதல்வர் எடியூரப்பா அடிபணிந்தார். முதல்வர் பதவியில் இருந்து இன்று பிற்பகல் ராஜினாமா செய்வேன் என்றும் அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்கங்களில் இருந்து முதல்வர் எடியூரப்பாவும் அவரது குடும்பத்தினர்களும் ஆதாயம் பெற்றதாக லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனையொட்டி எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா மேலிடம் அவருக்கு கட்டளையிட்டது. இதை முதலில் ஏற்றுக்கொண்டார். இதனையொட்டி புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கைய்யா நாயுடு ஆகியோர் நேற்றுமுன்தினம் பெங்களூர் வந்தனர். அவர்கள் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீடீரென்று முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் பா.ஜ. மேலிடம் உறுதியாக இருந்தது. கர்நாடகாவில் ஆட்சியே போனாலும் பரவாயில்லை. முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கிவிட்டு புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பா.ஜ. மேலிடம் உறுதியாக இருந்தது. கடைசியில் வேறுவழியில்லாமல் பா.ஜ. மேலிட கட்டளைக்கு எடியூரப்பா அடிபணிந்தார். இன்று மாலையில் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரில் உள்ள எடியூரப்பா வீட்டில் இருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையை எடியூரப்பாவின் விசுவாசியான பசவராஜ் பொம்மை வாசித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கட்சியின் பார்லிமெண்டரி பிரிவும் மேலிட தலைவர்களும் என்னை கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று முதல்வர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்கிறேன். சில பத்திரிகைகளில் செய்தி வந்ததுமாதிரி நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுக்கவில்லை. எனது முதல்வர் பதவியை இன்று பிற்பகல் ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எடியூரப்பாவுக்கு முதலில் ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. அதனால்தான் முதல்வர் பதவியில் இருந்து விலக எடியூரப்பா சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் மத்தியில் ஊழலுக்கு எதிராக போராட்டத்தை நடத்தவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் பாரதிய ஜனதாவுக்கு இருந்த தடை நீக்கியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்