முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநர காவல்துறை 4 மண்டலங்களாக பிரிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - சென்னை மாநர காவல்துறை 4 மண்டலங்களாக நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படும் என்றும், காவல்துறை நவீனப்படுத்த ரூ.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்திருப்பதாவது:

குற்றவாளிகள், சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அமைதியை நிலைநாட்ட இந்த  அரசு உறுதிபூண்டுள்ளது. பொதுமக்களிடையே நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகும் வகையில் காவல் துறை தனது கடமையினை எந்த தலையீடுமின்றி சுதந்திரமாகவும் திறம்படவும் செயலாற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவித்தவாறு கடந்த ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நில அபகரிப்பு குறித்த புகார்களை விசாரிக்க மாவட்டங்களில் சிறப்பு பிரிவுகள் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே திங்கள் முதல் 2,491 புகார்கள் பெறப்பட்டள்ளன. நில அபகரிப்பில் ஈடுபடுவர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து அந்நிலங்களை உரியவரிடம் திரும்ப ஒப்படைக்கும் பணியினை இந்த அரசு மேற்கொள்ளும். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் இஒளந்த சொத்துக்களை திரும்ப பெற இயலும் என்று திடமாக நம்பலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் துறையை நவீனப்படுத்த 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீட்டில் 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையை மேலும் நவீனப்படுத்துவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசு இந்த அரசு வலியுறுத்தும். பதிமூன்றாவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காவலர்  பயிற்சிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 25 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

தற்போது, தமிழ்நாட்டில் 1,492 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றுள் 282 காவல் நிலையங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 92 இடங்களில் புதிய காவல் நிலையக் கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் 11 கட்டடங்களை கட்டுவதற்கென 4.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் உரிய இடம் தேர்வு செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

சைபர் குற்றங்களை திறம்படத் தடுக்க சேலத்திலும், திருநெல்வேலியிலும் சைபர் குற்றப்பிரிவுகள் தொடங்கப்படும். சைபர் தடயவியல் சோதனைக் கூடங்கள், சென்னை மாநகர காவல், குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன. இதற்கு சோதனைக்கூடங்கள் சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பிற ஆறு மாநகரங்களிலும் ஏற்படுத்தப்படும்.

தற்போது காலியாக உள்ள 896 சார் ஆய்வாளர்கள், 121 தொழில்நுட்ப சார் ஆய்வாளர்கள், 5,588 இரண்டாம் நிலை காவல்களுக்கான  பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றப்புலனாய்வு ஆகியவற்றுக்கு கூடுதலாக தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு அப்பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறைக்கு உறுதுணையாக ஊர்காவல் படையினர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, 11,622 ஆக இருந்து வரும் இப்படையினரின் எண்ணிக்கை 16,000 ஆக உயர்த்தப்படும். இப்படையினரின் தினப்படி 65 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தப்படும்.

சென்னையை ஒட்டிப் பெருகி வரும் நகர்ப்புற வளர்ச்சியால் காவல் கண்காணிப்பு முறையிலுள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சென்னை மாநகர காவல் துறையும், செங்கல்பட்டு கிழக்கு காவல் மாவட்டமும் ஒன்றிணைக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. வேகமாக பெருகிவரும் சென்னை புறநகர் பகுதிகளை  சென்னை மாநகர காவல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் இந்த மாற்றம்ம செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு மறுசீரமைப்பின் மூலம் சென்னை புறநகர் காவல் ஆணையரகம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. இதனால் காவல் கண்காணிப்பு முறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2005-ம் ஆண்டு ஒரே உருவாகத்தின்கீழ் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையரகமே குற்றத்தடுப்பிற்கு ஏதுவாகவும், சிறப்பாக செயல்பட உகந்ததாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, இந்த அரசு சென்னை புறநகர் காவல் ஆணையரகத்தை சென்னை மாநகரக்காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக உருவாக்கும். நிருவாக வசதிக்காக இந்த ஆணையரகம் வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மண்டலம் என நான்கு மண்டலங்களை உள்ளடக்கியதாக இருக்கும். 

இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. 

 மேலும் தீயணைப்பு துறைக்காக, இந்த நிதியாண்டில், மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்கள், உயர் அழுத்தக் குழாய்கள், இணைப்பு கருவிகள் போன்வற்றை வாங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். தீயணைப்பு, மீட்புப் பணி நிலையங்களுக்கான 10 புதிய கட்டடங்களும், பெரம்பலூர் கோட்ட அலுவலகத்திற்காக ஒரு புதிய கட்டடமும், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் 243 வீடுகள் கட்டும் பணி 21.50 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. தீயணைப்பு - மீட்பு பணிகள் துறைக்காக இந்த திருத்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில் 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்