முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாகுவார் விமான விபத்தில் இருவர் பலி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

மாவ், ஆக.5 - உத்தரபிரதேசத்தில் ஜாகுவார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானியும், வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணும் பலியானார்கள். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து ஓரிருக்கை ஜாகுவார் போர் விமானம் ஒன்று நேற்றுகாலை பயற்சிக்காக புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் மாவ் மாவட்டத்தில் உள்ள பிலாஹி ஹிரோக்பூர் என்ற கிராமத்திற்கு அருகே கீழே விழுந்து நொறுங்கியது. விழுந்த உடனேயே அந்த விமானம் தீப்பிடித்து மளமளவென எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் இந்த விமானத்தை ஓட்டிவந்த விமானியும், அப்பகுதியில் வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணும் பலியானார்கள் என்று போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான இந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு விமானப்படை அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் விரைந்து சென்றுள்ளனர். இந்திய போர் விமானம் ஒன்று இந்த ஆண்டு விபத்துக்குள்ளானது இது இரண்டாவது முறையாகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ம் தேதி மிக் 21 ரக போர் விமானம் ஒன்று மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. ஆனால் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். கடந்த 2010 ம் ஆண்டில் மட்டும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 10 விமானங்கள் விபத்துக்குள்ளாயின. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 24 விமான விபத்துக்கள் நடந்துள்ளதாக மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தின் லோக்சபையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்