முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசியை குறைக்க ஊழலுக்கு எதிரான நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.5 - அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தவறி விட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் ஊழலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான யஷ்வந்த்சின்கா கூறினார். 

மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் அவர் பேசுகையில், விலைவாசி உயர்வு குறித்து 12 வது முறையாக விவாதம் நடைபெறுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தவறி விட்டது. விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்துவது மட்டும் போதாது. அதன் அடிப்படையில் உருவான முடிவுகளை அரசு செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வு குறித்து கடந்த 2009 ம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் நிலைக்குழு அறிக்கை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை மத்திய அரசு இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. 

இந்த விலைவாசி உயர்வு காரணமாக நாடு முழுவதும் மேலும் 5 கோடி மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி அறிக்கை கூறுகிறது. மத்திய அரசின் உணவு கிடங்குகளில் 65 லட்சம் மில்லியன் டன் கோதுமை, அரிசி இருந்தும் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், பொருள்களின் விலை நிர்ணயம் செய்ததே ஆகும். விலை அதிகமாக இருப்பதால் யாரும் பொருள் வாங்க முன்வருவதில்லை. 

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் உணவு பற்றாக்குறையே. எனவே அரசு கிடங்குகளில் உள்ள 25 மில்லியன் உணவு தானியங்களை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றார். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் வகையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை 21 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இவை தவிர ரிசர்வ் வங்கி 11 முறை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. கடந்த ஆண்டில் இந்திய தொழிலதிபர்கள் நமது நாட்டில் முதலீடு செய்யாமல் 44 ஆயிரம் மில்லியன் டாலரை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு குறைந்ததால் நாட்டில் தொழிற்சாலை உற்பத்தி பொருள்கள் குறைந்து விட்டன. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க கூடாது. இந்த விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க கூடாது. சில்லரை வியாபாரத்தில் வெளிநாட்டினரின் முதலீட்டால் நமக்கு லாபம் இல்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்