லோக்பால் மசோதா குறித்து இ.கம்யூனிஸ்ட் ஆய்வு

Image Unavailable

கொல்கத்தா,ஆக.6 - லோக்பால் மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும் மற்றொரு முக்கியமான மசோதாவான நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவும் விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு முக்கியமான மசோதாக்களுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்ய நேற்று இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரண்டு மோதாக்கள் குறித்தும் கேரள மாநிலத்தில் இடதுகம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தலைமை தாங்கினார். ராஜ்ய சபை உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் முதல்வர் புத்ததேவ் மேற்குவங்க இ.கம்யூ. தலைவர் பீமன் போஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். லோக்பால் மசோதா,நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா, வகுப்பு கலவர தடுப்பு மசோதா ஆகியவைகளுக்கு ஆதரவு கொடுப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ