சோனியா விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.6 - நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோனியா காந்தி விரைவில் குணமடைய காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி கடந்த பல மாதங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வந்தார். இந்த நிலையில் திடீரென்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தனது மகன் ராகுல் காந்தியுடன் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். அங்குள்ல ஸ்லோன் கெட்டரிங் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி அவர் விரைவில் குணமடைய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குஜராத் மாநில முதல்வரும் பா.ஜ. தலைவருமான நரேந்திர மோடி, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சோனியா குணமடையும் வரை காங்கிரஸ் கட்சி விவகாரத்தை கவனிக்க அவரது மகனும் கட்சியின் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மற்றும் ஜனார்த்தன் துவேதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் சோனியா அமைத்துள்ள அந்த கமிட்டியில் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஏன் இடம் பெறவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு மழுப்பலாக திவாரி பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ