முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.6 - 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் நேற்று நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் முடங்கின. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது, ஒரு வங்கியை இன்னொரு வங்கியுடன் இணைக்கக்கூடாது, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் ஊதிய உயர்வை அமுல்படுத்த வேண்டும், காலியாக உள்ள 1.50 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் ஐக்கிய பேரவை அறிவித்திருந்தது. இதையடுத்து வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

இதையடுத்து வங்கி ஊழியர்களின் ஒரு நாள்  வேலை நிறுத்தம் நேற்று திட்டமிட்டபடி நடைபெற்றது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் முன்பாக அவர்கள் ஆர்பாட்ட கோஷங்களை எழுப்பினார்கள். வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் நேற்று நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் முற்றிலுமாக முடங்கிப்போனது. அவசரத்திற்கு பணம் எடுப்பவர்கள் உள்பட அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பெரும் பாதிப்படைந்தனர். 

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகளின் ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் இந்த வங்கிகளிலும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த போராட்டம் முழுமையான வெற்றி பெற்றுள்ளது என்றும், இதற்குப் பிறகும் தங்களது கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் ஐக்கிய பேரவை அமைப்பாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்