தமிழர் பகுதியில் நெருக்கடி நிலையை நீக்க வலியுறுத்தல்

Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.7 - இலங்கையில் ஈழத் தமிழர் பகுதியில் உள்ள நெருக்கடி நிலைமையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையில் தற்போதைய நிலை என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் தீர்வு ஏற்பட இந்திய அரசு எல்லா வகைகளிலும் உதவும். இப்போது போர் இல்லாத சூழல் இருப்பதால் அரசியல் தீர்வு ஏற்பட இதுதான் சரியான நேரம். ஆகவே எல்லா சமூக மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் உடன்பாடு ஒன்றை விரைவில் இலங்கை முன்வைக்க வேண்டும். இதுதான் இலங்கைவாழ் தமிழர்களுக்கு உடனடி தேவையாக உள்ளது. தற்போதைய தகவலின்படி 2 லட்சத்து 90 ஆயிரம் தமிழர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் 10 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களில் இருப்பதாக தெரிகிறது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கும். அவர்களுடைய வளர்ச்சிக்கும் உதவி செய்யும். கடந்த மே 17 ம்தேதி இந்தியா வந்த இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் இதைத்தான் வலியுறுத்தினேன்.

மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா.குழு அறிக்கை மற்றும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட கொலைக்காட்சிகள் ஆகியவை குறித்து இந்தியா கவனம் செலுத்தி  வருகிறது. இருந்தாலும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்குத்தான் இந்தியா பாடுபடும். தமிழர் பகுதியில் இருந்து நெருக்கடி நிலைச் சட்டங்களை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அமைச்சரிடம் வலியுறுத்தினேன். போரின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வு பெற இலங்கை அரசு முயற்சிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது. எந்தவொரு சூழ்நிலையிலும் ஆயுதங்களை கையில் எடுக்கக் கூடாது. மீனவர்களை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளோம் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ