பார்லி.யில் பங்கேற்க கல்மாடிக்கு டெல்லி ஐகோர்ட் மறுப்பு

Image Unavailable

 

புது டெல்லி,ஆக.7 - காமன்வெல்த் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுரேஷ் கல்மாடிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க டெல்லி ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது. மேலும் அவருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அபராத தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்மாடி தன்னா நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது அதனை விசாரித்த நீதிபதி ராஜீவ் சாஹாய், நீதிமன்ற காவலில் இருக்கும் கல்மாடி தன்னை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இவரை போன்ற எம்.பிக்கள் சிலர் சிறையில் இருக்கும் போது இவருக்கு மட்டும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி கல்மாடிக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார். 

மேலும் கல்மாடி சிறையில் இருக்கும் போது எவ்வித விலக்கும் பெற முடியாது. அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார். 

முன்னதாக நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் கல்மாடியை பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு வழிகளில் அவர் மறைமுகமாக முயற்சிக்கிறார் என்று சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. நரம்பு தளர்ச்சி, ஞாபக மறதி உள்ளிட்டவற்றால் கல்மாடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் இப்போது அவருடைய தொகுதி பற்றி எதை நினைவில் வைத்திருக்க முடியும். அவரால் நாடாளுமன்றத்தில் என்ன பேச முடியும் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சந்தியாக் தெரிவித்தார். 

கல்மாடியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோக் தேசாய் வாதாடுகையில் கல்மாடியை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவருடைய தொகுதிக்கு அவரே பொறுப்பாளர். கடந்த 2 ஆண்டுகளில் கல்மாடியின் நாடாளுமன்ற வருகை பதிவேட்டை பார்த்தால் அவர் 80 முதல் 100 சதவீதம் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார். புனே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் 14 வது மக்களவையில் 154 கேள்விகளை எழுப்பி உள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ