முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா - குமாரசாமிக்கு லோக் ஆயுக்தா கோர்ட் சம்மன்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர், ஆக.9 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர்களாக இருந்த குமாரசாமி மற்றும் எடியூரப்பாவுக்கு புதிய தலைவலி ஆரம்பித்துவிட்டது. இவர்கள் இருவருக்கும் அம்மாநிலத்தின் சிறப்பு லோக் ஆயுக்தா கோர்ட் வெவ்வேறு விஷயங்களில் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் இரண்டுமே முறைகேடுகள் தொடர்பான சம்மன்கள்தான். இதனால் இரு முதல்வர்களும் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்தவர். சட்டமன்றத்தில் இரண்டுமுறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தனது பதவியை தக்கவைத்துக்கொண்டார். ஆனாலும் அவரைப் பிடித்த அஷ்டமத்துச் சனி விடவே இல்லை. தமிழ்நாட்டில் திருநள்ளாறு உள்ளிட்ட பல கோவில்களுக்கு வந்து தரிசனம் செய்து பார்த்தார். ஆனாலும் பலன் கிட்டவில்லை. இறுதியில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான குற்றச்சாட்டில்  சிக்கி தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது. இவருக்கு பிறகு கர்நாடகத்தின் புதிய முதல்வராக சதானந்த கவுடா தற்போது பொறுப்பேற்றுள்ளார். இவருக்கும்கூட ஆரம்பத்திலேயே சில பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி தற்போது ஏற்பட்டுள்ளது. தன்னுடைய குடும்பத்தாருக்கு ஆதரவாக சில நிலங்களை ஒதுக்கியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக வரும் 27 ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கோரி இவருக்கும் மற்றும் 14 பேருக்கும் கர்நாடகத்தின் சிறப்பு லோக் ஆயுக்தா கோர்ட் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கறிஞர் பாஷா என்பவர் கொடுத்த 2 வது புகாரின்பேரில் நீதிபதி சுதீந்திரராவ், எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். வரும் 27 ம் தேதி எடியூரப்பாவும் மற்றும் 14 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சுதீந்திரராவ் உத்தரவிட்டார். முன்னதாக வழக்கறிஞர் பாஷா தனது புகார் மனுவில், எடியூரப்பா விதிமுறைகளையெல்லாம் மீறி நிலங்களை ஒதுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதாவது அரக்கெரே என்ற இடத்தில் 2.5 ஏக்கர் நிலத்தையும், பெங்களூர் தெற்கு தாலுகா தேவார சிக்கனஹள்ளியில் 1.7 ஏக்கர் நிலத்தையும், பெங்களூர் கிழக்கு தாலுகா கெடலஹள்ளி கிராமத்தில் 1.21 ஏக்கர் நிலத்தையும் எடியூரப்பா தன் குடும்பத்தாருக்கு ஒதுக்கியதாக அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க கவர்னர் பரத்வாஜ் அனுமதி கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து பாஷா மற்றும் மற்றொரு வழக்கறிஞர் கே.என்.பாலராஜ் ஆகியோர் புகார் மனுக்களை அளித்திருந்தனர். அதையடுத்தே இந்த சம்மன் எடியூரப்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதேபோல் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் லோக் ஆயுக்தா கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஒரு தனியார் வீட்டு வசதி சங்கத்திற்கு நிலம் ஒதுக்குதல் மற்றும் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலுக்கான உரிமம் அளித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் குமாரசாமி மீது கூறப்பட்டன. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 30ம் தேதி குமாரசாமியும் மற்றும் இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று லோக் ஆயுக்தா கோர்ட் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. குமாரசாமியின் மனைவி அனிதாவிற்கும் சம்மன் அனுப்ப சிறப்பு நீதிபதி சுதீந்திரராவ் உத்தரவிட்டார். மேலும் ஜன்தக்கல் என்டர்பிரைசஸ் என்ற சுரங்க நிறுவனத்திற்கும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விதிமுறைகளை மீறி இந்த ஜன்தக்கல் கம்பெனிக்கு சுரங்க லைசென்ஸ் கொடுக்க குமாரசாமி பரிந்துரை செய்தார் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை வழக்கறிஞர் வினோத்குமார் தாக்கல் செய்துள்ளார். இந்த சம்மன்களால் இரண்டு முன்னாள் முதல்வர்கலும் கலங்கிப் போயிருக்கிறார்கள்.  இவர்களுக்கு பதவியும் போய்விட்டது. புதிய தலைவலியும் வந்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்