முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூலியை இருமடங்காக உயர்த்த எம்.பி.க்கள் கோரிக்கை

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.9 - வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் வழங்கப்படும் கூலியை ரூ. 200 ஆக உயர்த்த வேண்டும் என்றும் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாத்மாகாந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கூலி மிகத் தாமதமாக வழங்கப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இதுகுறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் பங்குபெற்ற எம்.பி.க்கள் இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் கூலியை ரூ. 200 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகமாகிவிட்டது. அதனால் ஊரக ஏழை மக்களுக்கு வழங்கப்படும் கூலியை இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டும். ஆண்டுக்கு 300 நாட்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு உரிய கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தை நாடு முழுவதும் சீராக அமுல்படுத்தும் வகையில் சில புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது என்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியது, நாட்டில் நக்ஸல் பாதித்த 60 மாவட்டங்களில் இத்திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற புகார் உள்ளது. மேலும் இத்திட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் 9 மாதம் முதல் ஒரு வருடம் வரை கொடுக்கப்படாமல் இருப்பதாகவும் புகார் உள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு மத்திய அரசு புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள் இத்திட்டத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், நக்ஸல் பாதித்த பகுதிகளில் இத்திட்டத்தை அமல்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்