கருணாநிதி நல்ல புத்தகத்தை படிக்க முதல்வர் அறிவுறுத்தல்

Image Unavailable

 

சென்னை, ஆக.9 - முன்னாள் முதல்வர் குடும்ப பத்திரிகையை படிப்பதைவிட நல்ல புத்தகத்தை படிக்க நேரம் செலவிடலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், நாடே பாராட்டுகின்ற நல்ல பட்ஜெட். இன்னும் சொல்லப்போனால் சத்தான பட்ஜெட். முத்தான பட்ஜெட். ஐந்து முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தன்னுடைய குடும்ப பத்திரிகையிலே ஏனோ அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறார். ஐந்து முறை இந்த நாட்டை ஆண்டவர். நீங்களும் சட்டமன்ற உறுப்பினர்தானே?. உங்களையும் திருவாரூர் மக்கள் தெரியாமல் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்தானே. இந்த அவைக்கு வந்து உங்கள் கருத்தை அன்போடு சொல்லலாம் அல்லவா? வரமாட்டேன் என்கிறீர்களே. தண்டவாளத்தில் தலைவைத்தேன் என்கிறீர்கள்? இந்த சட்டமன்றத்திலேயே கால்கூட வைக்கமாட்டேன் என்கிறீர்களே. ஆனால் எங்கள் ஜெயலலிதா கடந்த ஆட்சியிலே அவை முழுவதும் நரிகளாக நீங்கள் நிறைந்திருந்தபோது சிங்கிளாக வந்தார்களே. எங்கள் ஜெயலலிதா சிங்கிளாக வந்தாலும், சிங்கமாக வந்தார்களே. அந்த தைரியம், அந்த திராணி உங்களுக்கு இருக்கின்றதா என்று நான் கேட்கின்றேன். அப்படி எதிரிகள் வருகின்ற போர் படைகளை எதிர்க்கின்ற ஆற்றல் படைத்தவர் எங்கள் ஜெயலலிதா. சரி, நீங்கள்தான் வரவில்லை. நீங்கள் அனுப்பிய உங்கள் பிள்ளை தளபதி,  தன்னைத்தானே தளபதி என்று சொல்லும் அவரும் இந்த அவைக்கு வருவதில்லை. அவரும் இன்னும் ஸ்கூல் பிள்ளை மாதிரியே இருக்கின்றார். இங்குதான் உட்காருவேன். அங்குதான் உட்காருவேன். ஒன்றாகத்தான் உட்காருவோம் என்று அடம் பிடிக்கின்றார். அவ்வளவையும் முன்பே தெரிந்துதான் உங்கள் நடவடிக்கையெல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்துதான் சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட மக்கள் உங்களுக்கு தர மறுத்துவிட்டார்கள் என்பதை இந்த நேரத்திலே நான் பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திட்டங்களே இல்லை, திட்டங்களே இல்லை, பக்கங்கள்தான் நிறைந்திருக்கிறது என்று இன்றைக்கு தன்னுடைய குடும்ப பத்திரிகையிலே அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றார் ஒரு தலைவர். நான் அன்போடு அவரிடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், உறுப்பினர் விஜயபாஸ்கர் அடிக்கடி முன்னாள் முதல்வரின் குடும்ப பத்திரிகையை பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நாட்டில் யாருமே அந்த குடும்ப பத்திரிகையை படிக்கவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்று யாரும் கவலைப்படவும் இல்லை.  இந்த உறுப்பினர் மட்டும் ஏன் - இவ்வளவு நேரத்தை வீணடித்துக் கொண்டு தவறாமல் அதை படித்து இங்கே சட்டமன்றத்தின் நேரத்தையும் வீணடித்துக்கொண்டு, அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் அந்த முன்னாள் முதல்வரின் குடும்ப பத்திரிகை படிப்பதற்காக செலவிடும் நேரத்தை பயனுள்ளதாக வேறு ஏதாவது நல்ல புத்தகத்தை படிக்க செலவிடலாம் என்பதை அவருக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ