எஸ்ஸார் கோபியிடம் விடிய-விடிய போலீசார் விசாரணை

Image Unavailable

 

மதுரை,ஆக.10 - பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திமுக பிரமுகர் எஸ்ஸார் கோபியை காவலில் எடுத்து போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் எஸ்ஸார் கோபி. இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமாகவும் இருந்து வந்தார். இவர் மீது நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு, கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2009 ம் ஆண்டு வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது விபத்தாக அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பாண்டியராஜனின் மனைவி, முன்விரோதத்தில் தனது கணவரை யாரோ காரை ஏற்றி கொலை செய்யது விட்டார்கள் என்று புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி எஸ்ஸார் கோபி உள்பட 13 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த எஸ்ஸார் கோபியை போலீஸ் காவலில்  ஒரு  நாள் மட்டும் விசாரிக்க மதுரை 6-வது மாஜிஸ்திரேட் சுஜாதா அனுமதி அளித்தார்.

    இதையடுத்து எஸ்ஸார் கோபியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு விடிய,விடிய போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். மேலும் போலீஸ் சூப்பிரெண்டு அஸ்ராகார்க் நேரடியாக விசாரணை நடத்தினார். அப்போது அவருடன் பல்வேறு திமுகவினர் ஈடுபட்டதாக எஸ்ஸார் கோபி தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்டு எஸ்ஸார் கோபியுடன் நெருங்கி பழகிய திமுக பிரமுகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விசாரணை முடிந்து எஸ்ஸார் கோபி நேற்று மாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ