முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவிற்கு அ.இ.பார்வர்டு பிளாக் பாராட்டு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக.10 - பாராளுமன்றத்தில் கொண்டுவரப்போவதாக சொல்லப்படும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக குரல் கொடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டுபிளாக் தமிழ் மாநில தலைமை செயற்குழுக்கூட்டம் மதுரை ஹோட்டல் பிரேம் நிவாஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வீ.எஸ்.நவமணி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மூ.மகேஸ்வரன், மாநில பொருளாளர் கே.என்.கே.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராஜபாளையம் தர்மராஜ், சென்னை சாமிதேசிகன், மாநில செயலாளர்கள் ராமநாதபுரம் கணேசத்தேவர், நெல்லை ராமச்சந்திரன், மதுரை ராஜபாண்டியன், பேராவூரணி தியாகு, தஞ்சை சுப்ரமணியன், கோவை ரமேஷ், ஈரோடு முருகவேல், திருப்பூர் முருகேஷ், திருச்சி மார்க்கெட் முருகன், திருவாரூர் விஸ்வநாதன், நீடாமங்கலம் சுரேஷ், சென்னை பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மஞ்சுநாதன், தென்சென்னை தேவராஜன், வடசென்னை ஆகாஷ், மேலூர் ஸ்டாலின், தூத்துக்குடி பாலமுருகன் செந்தில், கன்னியாகுமரி பெரியசாமி, பொறியாளர் முருகேசன், சேலம் அடைக்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி சுரேஷ் நன்றி கூறினார். 

புதிய வரியற்ற, சுமார் 8900 கோடிக்கான புதிய நலத்திட்டங்கள், 30 ஆயிரம் கோடி மானியம் உள்பட 173 கோடி உபரி வரவு - செலவு திட்டம் அறிவித்துள்ள  முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுதலையும், நன்றியையும் இம்மாநிலக்குழு தெரிவித்துக்கொள்கிறது. 

உலகிற்கு உணவு தரும் விவசாயம் நசிந்து போய்விட்டது. அதை மீட்டெடுக்க வேளாண்மை புரட்சியை ஏற்படுத்த நீர் மேலாண்மைக்குரிய அணைகள் சீரமைப்பு திட்டங்கள் சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீதம்  மானியம், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் என்று விவசாயிகள் மீது பரிவோடு புதிய பட்ஜெட்டை அறித்துள்ள தமிழக அரசை வாழ்த்துகிறது. 

மக்களை வாட்டி வதைத்து வரும் மின் தட்டுப்பாட்டை அறவே ரத்து செய்திட தொலைநோக்கு மின்சார உற்பத்தி திட்டம் சூரிய சக்தியால் தெருவிளக்குகள் பசுமை வீடுகள் தொழிற்துறை வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு என்று தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக்க கொண்டு செல்லும் சிறப்புக்குரிய பட்ஜெட்டாக இம்மாநிலக் குழு கருதுகிறது. 

ஏகாதிபத்திய சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் முறையில்  கொண்டு வர இருக்கும் வகுப்பு வாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கும் எதிரான வன்முறை தடுப்புச்சட்டம், அணை பாதுபாப்புச்சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்த தமிழக முதல்வரை இக்கூட்டம் பாராட்டுவதோடு இந்த மசோதா எதிர்ப்புக்கு அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமனதோடு ஆதரிப்பது என்று தீர்மானிக்கிறது. 

கடந்த கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட நிலஅபகரிப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகளை தொடரவேண்டும் என இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. மதுரையில் நடந்த தா.கிருஷ்ணன் கொலை, தினகரன் பத்திரிகை அலுவலக தாக்குதல் மற்றும் கொலை, தினபூமி ஆசிரியர் மீது தாக்குதல், ஜீவி சண்முகசுந்தரம் போன்ற அரசியல் சார்ந்த குற்றவழக்குகளை மறுவிசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்கச் செய்ய உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. உணவு விடுதிகளில் ஏழை எளிய மக்களின் நலன்கருதி குறைந்த விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்