முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. இப்போது `திகார் முன்னேற்றக் கழகம்' கொறடா கிண்டல்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - அன்று வாரிசுகளுக்கு பதவி வாங்க டெல்லிக்கு சென்றவர்கள் இன்று வாரிசுகளை பார்க்க டெல்லிக்கு (திகார்) செல்கிறார்கள் என்றும், தி.மு.க. இப்போது திகார் முன்னேற்றக் கழகமாக மாறி விட்டது என்றும் சின்னசேலம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினரும், அரசு கொறடாவுமான மோகன் சட்டமன்றத்தில் கிண்டலடித்தார்.  

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று சின்னசேலம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினரும், ஆளும்கட்சி கொறடாவுமான மோகன் பேசியதாவது:​

தமிழகத்தின் வாக்காளப் பெருமக்கள் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அலைகடலெனத் திரண்டு வந்து ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக அரியணை ஏற்றி  தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.

அ.தி.மு.க.வுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்ததன் மூலம், மைனாரிட்டி தி.மு.கவின் ஊழல் ஆட்சி, ஊரைவிட்டே விரட்டப்பட்டுவிட்டது; குடும்ப ஆதிக்கத்தின் கொட்டம் குலை நடுங்கி ஒடுங்கிப் போய்விட்டது.  குடும்ப வாரிசுக்கு பதவி கேட்டு டெல்லிக்குப் போனவர்கள் இப்போதும் டெல்லிக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.  எதற்காக?  திகார் சிறையைப் பார்வையிடுவதற்காக. தி.மு.க. இப்போது திஹார் முன்னேற்ற கழகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. 

இந்த நிதிநிலை அறிக்கையானது, கடந்த கால மைனாரிட்டி ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்துவிட்டு, களஞ்சியத்திலே சாதனை செய்துள்ளதாக கூறி, சோதனைகளை உருவாக்கி சென்றுள்ளதன் மத்தியில், மக்களின் மனநிலைக்கேற்ப தயாரிக்கப்பட்ட பாராட்டிற்குரிய உன்னத நிதிநிலை அறிக்கையாகும். இந்த நிதிநிலை அறிக்கையை முழுமையாக பாராட்டுவதோடு, அதிலே இருக்கின்ற பல்வேறு உணர்வுகளை நான் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்வது என்னுடைய கடமையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழியை உடைத்தெறிந்து, ஜெயலலிதா 3-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 திட்டங்களை அறிவித்தார்கள் . 

மேலும், மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மீன்பிடி அல்லாத காலங்களில் மீனவக் குடும்பம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவ மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.  மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் மகத்தான திட்டங்களாகும்.  

இதுபோன்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த வாக்குறுதியை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை என்று ஒரு புதிய துறையை உருவாக்கி, அரசின் நலத்திட்டங்கள் விரைவில் மக்களை நேரடியாக சென்றடைய எடுத்த முயற்சி உங்களை ஜெயலலிதா தவிர இதுவரை வேறு எந்த அரசும் செய்திராத ஓர் அரிய சாதனையாகும்.

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 50 ரூபாய் உயர்த்தினாலும், நுகர்வோர் நலன் கருதி, ஜெயலலிதா அதன் விற்பனை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், அதன்மீதான மதிப்புக் கூட்டு வரியை 1​7​2011 முதல் அறவே இரத்து செய்திருப்பதை, தாய்மார்கள் அனைவரும் வரவேற்று, ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில், 1992-ம் ஆண்டு  அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த, தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் சிசு கொலையை கட்டுப்படுத்த உதவியது. ஆனால், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே, கடந்த  மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.  ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இப்போது மீண்டும் இத்திட்டம் புனரமைக்கப்பட்டு, இனி முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைகான வைப்பு தொகை 50 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டு பெண் குழந்தைகளுக்காகன வைப்புத்தொகை 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளது  பெண் குழந்தையைப் பெற்றுள்ள பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி, வரவேற்கிறார்கள்.

மேலும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவை இலவசமாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரிசி பெறத் தகுதியுடைய 1.83 கோடி குடும்பங்களிலுள்ள தாய்மார்கள்  பயனடைவார்கள்.

கிராமப்புறங்களிலுள்ள வீடற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 60,000 பசுமை வீடுகளை நடப்பாண்டிலேயே கட்டித்தர 1,080 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த ஜெயலலிதாவை அவர்களை கிராமப்புற ஏழை எளிய மக்கள் வரவேற்று பாராட்டுகிறார்கள்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவச மடிக் கணினி வழங்கும் அற்புதத் திட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதேபோன்று மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களிடையே உள்ள இடைநிற்றலைத் தவிர்க்கும்பொருட்டு, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு தலா 1,500 ரூபாயும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு தலா 2,000 ரூபாயும் சிறப்பு ஊக்கத் தொகை அளித்து, இத்தொகை வைப்பு நிதியாக வைக்கப்படும் என்ற திட்டம் பெற்றோரும், மாணவர்களும் பெரிதும் வரவேற்று உள்ளார்கள். இவ்வாறு மோகன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்