முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.-காங்கிரஸ் பேச்சுவார்த்தை இழுபறி

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.4 - சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க.- காங்கிரஸ் பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் முடிவடைந்துள்ளது. காலையில் கருணாநிதியுடன் சந்திப்பதை ரத்து செய்து விட்டு ஆசாத் டெல்லி புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க கருணாநிதி 5-ம் தேதி உயர்நிலை கூட்டத்தை கூட்ட உள்ளார். 

காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி தொடர்கதையாக போய் கொண்டுள்ளது. காங்கிரஸ் கேட்கும் எந்தவித உடன்பாடுகளுக்கும் தி.மு.க. வர தயாராக இல்லை. அ.தி.மு.க., தே.மு.தி.க. பேச்சுவார்த்தை உறுதியானதால் காங்கிரசை கழற்றி விட்டால் தனியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்றும், காங்கிரஸ் வெளியே போக யோசிக்கும் என கருணாநிதி உறுதியாக நம்புவதாக கூறப்படுகிறது. 

இதனால் காங்கிரசுக்கு 53 தொகுதிகள் வரை தர தி.மு.க. தயாராக இருக்கிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட்டுகளுக்கு உள்ள தொகுதிகளை அடுத்த கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தாகி விட்டது. இனி எந்த முடிவும் உங்கள் கையில் என்று கருணாநிதி நேற்று முன்தினம் இரவு குலாம் நபி ஆசாத்திடம் கூறியதாக தெரிகிறது. கூட்டணி விஷயமாக உடனடி முடிவெடுக்காமல் தி.மு.க.வை முடிவெடுக்க விட்டு விஜயகாந்தையும் கை நழுவ விட்டு காங்கிரஸ் தற்போது நட்டாற்றில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. 

இதனிடையே மீண்டும் அடுத்த சுற்று பேச்சு வார்த்தையை கருணாநிதியும், குலாம் நபி ஆசாத்தும் நேற்று காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. பேச்சுவார்த்தை விபரங்களை கேட்டறிந்த சோனியா உடனடியாக டெல்லிக்கு வந்து விடும்படி குலாம் நபி ஆசாத்துக்கு உத்தரவிட்டதின் பேரில்காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அறிவாலயத்தில் கருணாநிதி தயாராக இருந்தபோதும் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு தங்கபாலுவையும் அழைத்துக்கொண்டு ஆசாத் டெல்லி சென்று விட்டார். 

இதனால் கடுப்படைந்த கருணாநிதி மார்ச் 4-ந் தேதி 1 நாள் டைம் கொடுப்போம். மார்ச் 5-ம் தேதி கூட்டணி பற்றி முடிவெடுப்போம். காங்கிரஸ் ஒத்து வரவில்லை என்றால் பெரிய அறிக்கையாக வெளியிட்டு கூட்டணியையே முறித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மார்ச் 5-ம் தேதி உயர்நிலை செயல் திட்டக்குழுவை கருணாநிதி கூட்டவுள்ளார். மேலுக்கு தேர்தல், தேர்தல் அறிக்கை சம்பந்தமாக என்று கூறப்பட்டாலும் அந்த கூட்டத்தில் காங்கிரஸ் ஒத்துவராவிட்டால் உறவை முறித்து கொள்வது சம்பந்தமாக முடிவெடுப்பதே பிரதான விஷயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பீஹார் தந்த பாடத்தால் காங்கிரஸ் தனியாக நிற்க முயற்சிக்காது. ஆகவே இருபுறமும் வீம்பாக இழுத்து பிடித்து ஒரு முடிவுக்கு வருவார்கள் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் மார்ச் 5-க்குள் முடிவெடுத்தாக வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்