முக்கிய செய்திகள்

சிரியாவில் ராணுவம் சுட்டதில் பொதுமக்கள் 10 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ், ஆக.14 - சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக பலியானார்கள். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனை ஒடுக்க அதிபர் ஆசாத் ராணுவத்தை ஏவிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போராடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தொழுகை முடிந்ததும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிபருக்கு எதிராக கோஷங்களை முழங்கினர். ஹமா, டெல்அல், ஷோர் ஆகிய நகரங்களில் ராணுவ டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. சில நகரங்களில் நேரடியாகவும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் நேற்று முன்தினம் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும், ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய ஆசிய நாடுகளும் சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களை கொன்று குவிப்பதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: