முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரக்ஷான் படத்திற்கு தடையை நீக்கி ஆந்திரா, பஞ்சாப் அரசுகள்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.- 15 - பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்த ஆரக்ஷான் படத்திற்கு விதித்திருந்த தடையை ஆந்திரா மற்றும் பஞ்சாப் அரசுகள் நீக்கிவிட்டன. ஆனால் உத்தரபிரதேச மாநில அரசு மட்டும் தடையை நீக்கவில்லை. பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆரக் ஷான். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும் வசனங்களும் இட ஒதுக்கீட்டு பிரச்சனையை விமர்சிக்கும் விதத்தில் இருந்ததால் சில மாநில அரசுகள் இந்தப்படத்தை வெளியிட தடை விதித்தன. ஆந்திரா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் சில மாநிலங்களும் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க ஆலோசித்து வந்தன. 

இந்நிலையில் ஆரக்ஷான் படத் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா சுப்ரீம் கோர்ட்டில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சட்டத்திற்கு புறம்பாக இந்த படத்தில் எந்த காட்சிகளும் சித்தரிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் ஆரக்ஷான் படத்தில் இருந்த சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.  இந்த தகவல் ஆந்திரா மற்றும் பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டன. 

இதையடுத்து ஆந்திரா, பஞ்சாப் மாநில அரசுகள் ஒரு கமிட்டியை அமைத்தன. இந்த குழுவில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். இந்த கமிட்டிக்கு ஆரக்ஷான் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தை  பார்த்த கமிட்டி உறுப்பினர்கள் திருப்தி அடைந்து தடையை நீக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் படத்திற்கு விதித்திருந்த தடையை அகற்றின. ஆனால் உ.பி.யில் மட்டும் இந்த தடை நீக்கப்படவில்லை. அங்கு தடை நீடித்து வருகிறது. இதுபற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா தெரிவிக்கையில் ஆந்திரா மற்றும் பஞ்சாபில் இந்த படத்திற்கான தடை அகற்றப்பட்டுவிட்டது. ஆனால் உ.பி.யில் மட்டும் தடையை நீக்க நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். உ.பி.யில் மட்டும் இரண்டு நாட்களில் 2.5 கோடி ரூபாய் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்