முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் கேள்வி நேரத்தை பிற்பகல் 2 மணிக்கு மாற்ற திட்டம்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 5 - சபை கூடியதுமே ஏதாவது ஒரு  பிரச்சினையை முன்வைத்து கேள்வி நேரத்தை நடத்த விடாமல் எம்.பி.க்கள் இடையூறு செய்வதால் இந்த கேள்வி நேரத்தை காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மாற்றி  வைக்க ரஜ்ய சபையின்  தலைவர் ஹமீது அன்சாரி தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தின்  லோக் சபை, ராஜ்ய சபை ஆகிய இரு சபைகளிலும் வழக்கமாக காலை 11 மணி முதல் 12 மணி வரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் பதில் அளிப்பார்கள். ஆனால் சமீப காலமாக பாராளுமன்றத்தின் இந்த இரு சபைகளும்  கூடத்தொடங்கியதுமே ஏதாவது ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் கேள்வி நேரத்தை நடத்த முடியாத சூழ்நிலையும் கூட ஏற்படுகிறது. இது குறித்து ஆழமாக யோசித்த ராஜ்ய சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி, கேள்வி நேரத்தை காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்க முடிவு  செய்துள்ளார்.

அதன்படி வருகிற திங்கள்  முதல்  வியாழக்கிழமை வரை ராஜ்ய சபையில் கேள்வி நேரம் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

முதல்  கட்டமாக கேள்வி நேரம் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடத்தப்பட்டது.

இனி காலை 11 மணிக்கு  சபை கூடியதுமே ஜீரோ அவர் என்ற  வழக்கமான விவாத நேரம் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது சபை தலைவரின் அனுமதியை பொறுத்து  எம்.பி.க்கள் தங்களது பிரச்சினையை எழுப்பலாம் என்றும் அன்சாரி கேட்டுக்கொண்டார்.

இனி சபை கூடியதும் உடனடியாக ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்