முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரம் பாதிக்காது - ரெட்டி

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      இந்தியா

 

புதுடெல்லி. ஆக.- 16 - அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கடன் மற்றும் நிதி நெருக்கடியால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வேணுகோபால் ரெட்டி  கூறியுள்ளார். அமெரிக்காவில் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் அந்நாடு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் ஆளுனர் யாகா வேணுகோபால் ரெட்டி  மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பூர்வாங்கமானதுதான்.  அதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது என்றார்.

என்றாலும் அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2008 ம் ஆண்டு ஏற்பட்ட உலக  நிதி நெருக்கடியின் போது இந்தியாவின் பொருளாதரம்  சீர்கெட்டு விடாமல் தகுந்த நடவடிக்கை எடுத்து காப்பாற்றியவர்  ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டுக்குள் வைப்பதற்கான பல முக்கிய  நடவடிக்கைகளை எடுத்து நன்மதிப்பை பெற்ற ரெட்டி  கூறுகையில்  அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு நீண்ட கால பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகத்தான் இருக்கிறது.  இந்த பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர்  கூறினார்.

அமெரிக்காவின் பொருளாதாரம் மூன்று  ஏ விலிருந்து 2 ஏ பிளஸ் ஆக வீழ்ச்சி அடைந்ததை  தொடர்ந்து கடந்த 2008 ம் ஆண்டை போன்ற நிதி நெருக்கடி ஏற்படுமா? என்று கேட்டதற்கு  அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி 2008 ம் ஆண்டை போல இருக்காது  என்று கூறினார்.

அமெரிக்காவில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் நமது  நாட்டிற்கு மூலதனங்கள் அதிகமாக வந்து குவியும். நிதி நெருக்கடி ஏற்பட்டால் இந்த மூலதன வரவு நமக்கு குறையும் என்றும் ஆனாலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவிலும் பாதிக்காது என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்