முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவுக்கு மருத்துவர்கள் குழு பரிசோதனை

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.19 - ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல் நிலையை டாக்டர்கள் குழு ஒன்று நேற்று பரிசோதனை செய்தது. மெதந்தா மெடிசிட்டி, ஜி.பி. பந்த் மருத்துவமனை மற்றும் திகார் ஜெயில் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் அன்னா ஹசாரேவின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்த பிறகு அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக அறிவித்தனர். முன்னதாக, டெல்லியில் கைது செய்யப்பட்ட பிறகு அன்னா ஹசாரே திகார் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைச்சாலையிலும் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு வயது 74 ஆக இருப்பதால் மத்திய அரசு கவலையடைந்துள்ளது. அன்னா ஹசாரேவுக்கு ஏதாவது ஏற்பட்டால் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் மத்திய அரசு கவலையில் மிதக்கிறது. 

அதன் எதிரொலிதான் அன்னா ஹசாரேவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையாகும். தான் வெளியே வர வேண்டும் என்றால் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே நிபந்தனை விதித்திருந்தார். இதையடுத்து அவருடன் மத்திய அரசு சமரச பேச்சு நடத்தியது. அதில் ஓரளவு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. தனது உண்ணாவிரதத்தை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் மட்டும் நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டு விட்டார். 

அநேகமாக அவர் சிறையில் இருந்து இன்று வெளியேறுவார் எனத் தெரிகிறது. அதன்பிறகு ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார் அன்னா ஹசாரே. நேற்று அவர் சிறையில் இருந்து வெளியேறவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அன்னா ஹசாரே இன்று ராம்லீலா மைதானத்திற்கு செல்வார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் என்ற அன்னா ஹசாரேவின் உதவியாளர் தெரிவித்தார். அன்னா ஹசாரேவின் உடல் நலம் நன்றாக உள்ளது என்று டாக்டர் நரேஷ் தலைமையிலான டாக்டர்கள் சான்றிதழ் அளித்திருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதற்கிடையே ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்காக டெல்லி ராம்லீலா மைதானம் தற்போது தயாராகி வருகிறது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழ்நாட்டு தலைவர்களும் அன்னா ஹசாரே கைதானதை கண்டித்துள்ளனர். பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் டாக்டர் தம்பிதுரையும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்