முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன் நிறுவனங்கள் - வீடுகளில் சோதனை

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத், ஆக.19 - ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று ஒரே சமயத்தில் திடீர் சோதனைகளை நடத்தினர். இந்த சோதனைகள் இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெற்றன. ஆந்திராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ஆந்திராவில் யார் முதல்வர் என்பது குறித்து பெரும் பிரச்சினை கிளம்பியது.

ஒய்.எஸ்.ஆரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் மூலம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. இதை அடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தையின் பெயரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்து விட்டார் என்று புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று ஜெகன்மோகன் எம்.பி. யின் அலுவலகங்கள், வீடுகள், நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனைகளை நடத்தினர்.

ஜெகன் மோகன் கம்பெனிகளிலும்  அந்த கம்பெனிகளில் முதலீடு செய்துள்ள பிற கம்பெனிகளிலும் இந்த சோதனைகள்  நடத்தப்பட்டன.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.பி. ஆச்சார்யா வீட்டிலும் இந்த சோதனை நடந்தது.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான பாரதி சிமெண்ட் கம்பெனியில் பல கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்குகள், கோப்புகள் மற்றும் இதர ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான புலிவெந்துலா பாலிமர்ஸ், ஜனனி இன்ப்ரா, கிளாசிக் ரியாலிட்டி, ஜெகதி பப்ளிகேஷன்ஸ், இண்டியா டெலிவிஷன், மந்த்ரி டெவலப்பர்ஸ் ( பெங்களூர்), டால்மியா சிமெண்ட்ஸ் ( புதுடெல்லி), இண்டியா சிமெண்ட்ஸ் ( சென்னை )  ஆகிய இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த அதிரடி சோதனைகளை நடத்தினர்.

ஜெகன் மோகன் ரெட்டி தற்போது கிருஷ்ணா மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

ஜெகன் மோகன் தற்போது கடப்பா பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்