முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்கினார்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 20 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக சேவகர் அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர கோரி தனது ஆதரவாளர்களுடன்  உண்ணாவிரதத்தை துவக்கினார். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா ஒன்றை கொண்டுவர  வேண்டும் என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கோரிவருகிறார். இந்த லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.  இதற்காக கடந்த 16 ம் தேதி டெல்லியில் உள்ள ஜெ.பி. பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஹசாரே மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவரது உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் 22 நிபந்தனைகளை விதித்திருந்தனர். இந்த நிபந்தனைகளில் 16 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட அன்னா ஹசாரே, 3 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டும், உண்ணாவிரதத்தில் 5 ஆயிரம் பேருக்குமேல் பங்கேற்கக் கூடாது, இரவு 9 மணிக்குமேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 6 நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து ஜெ.பி. பூங்காவில் உண்ணாவிரதம் இருக்க அளிக்கப்பட்ட அனுமதியை போலீசார் திரும்பப் பெற்றுக்கொண்டனர். மேலும் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தனர்.
ஆனால் தடையை மீறி தான் திட்டமிட்டபடி அதே இடத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். இதையடுத்து 16 ம் தேதி காலை அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஹசாரேயின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் மத்திய அரசு கலக்கமடைந்தது. சிறையில் இருந்த ஹசாரேவை டெல்லி போலீசார் விடுதலை செய்தனர். ஆனால் அவர் சிறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். உண்ணாவிரத காலத்தை ஒரு மாதமாக நீடித்துக் கொடுத்தால் மட்டுமே தான் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒப்புக்கொள்வதாக ஹசாரே கூறியிருந்தார். இதையடுத்து அவரிடம் டெல்லி போலீசார் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியாக அன்னா ஹசாரே 15 நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிப்பது எனவும், அந்த உண்ணாவிரதத்தை ராம் லீலா மைதானத்தில் நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான போலீஸ் மற்றும் டெல்லி மாநகராட்சி அனுமதிகள் ஹசாரேவுக்கு வழங்கப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஹசாரே ஆதரவாளர்கள் டெல்லி போலீசாரிடம் உறுதி அளித்தனர். அதன்படி திஹார் சிறையில் இருந்து நேற்று காலை வெளியே வந்தார். அப்போது சிறை வாசலின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். அலங்கரிக்கப்பட்ட ஒரு டிரக் வண்டியில் நின்றபடியே சிறையை விட்டு வெளியே வந்த ஹசாரே, தனது ஆதரவாளர்களைப் பார்தது வந்தேமாதரம் என்று கூறி தனது கைகளை அசைத்தார். அப்போது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ஹசாரே, முதலில் காந்தி சமாதிக்கு சென்றார். அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய காந்தியவாதி அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானத்தை சென்றடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் உண்ணாவிரதப் பந்தலில் வந்தமர்ந்தார். நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதம் இருக்கும் பகுதியைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மருத்துவக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்