முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை கண்டித்து பாரத் பந்த் எதிர்க்கட்சிகள் ஓரிரு நாளில் முடிவு

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 20 - ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்க தவறியதை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அடுத்த வாரம் நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் நடத்த முடிவு செய்துள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறி விட்டது என்றும் ஊழலை அடியோடு ஒழிக்கும் வகையில் வலுவான சட்டத்தை ஏற்காமல் வலுவற்ற ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் மத்திய அரசின் மெத்தனப் போக்கால் தற்போது சமூக ஆர்வலர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழவதும் அனைத்து தரப்பு மக்களும் மிகப் பெரிய போராட்டத்தில் குதித்துள்ளனர். எனவே ஊழல் குறித்த பிரச்சினையை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க தீர்மானித்துள்ளனர்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்து அடிப்படையில் ஊழலுக்கு எதிராக இணைந்து அடுத்த வாரம் நாடு தழுவிய அளவில் பந்த் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளன என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. பாரத் பந்த் நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல் கட்ட ஆலோசனை நடைபெற்று முடிந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் பந்த் நடைபெறும் நாள் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இந்த வார இறுதியிலோ அல்லது வரும் திங்கட் கிழமையன்றோ அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony