முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலமான லோக்பால் மசோதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 21 - பலமான லோக்பால் மசோதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பலமான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஊழலை ஒழிக்க வகை செய்யும் ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் வருகின்ற 30-ம் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசாரே கடந்த 5 நாட்களாக டெல்லியில் உள்ள ராம்லீலா மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறது. அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் நாடு தழுவிய ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. அப்போது அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றும் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அண்ணா ஹசாரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் மத்திய மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர். சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஊழலை ஒழிக்க ஒரு பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவர ஆதரவு தெரிவித்தார். ஊழலை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதை ஒழிக்க பலமான, குறையில்லாத ஒரு லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இதில் நீக்கப்போக்கு வேண்டும். அரசியல் கட்சிகள் உள்பட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பலமான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் லோக்பால் மசோதா குறித்து மக்களின் கருத்தை அறிய வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு அண்ணா ஹசாரே தலைமையிலான சிவில் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது காலம் கடத்தும் செயல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் பலமான லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்ற விசேஷ கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. பலமான லோக்பால் விஷயத்தில் அண்ணாஹசாரேவுக்கு முழு ஆதரவு கொடுக்கப்படும் என்றும் பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony