முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக்குவது வரவேற்கத்தக்கது-சரத்குமார் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 21 - தமிழக முதல்வரின் சீரிய சிந்தனையால் உதித்த புதிய திட்டமான புதிய தலைமை செயலக கட்டிடத்தை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமனையாக அமைப்பது வரவேற்கத்தக்கது என்று மு.மு.க. தலைவர் டாக்டர் சேதுராமன் , தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  மூ.மு.க. கட்சி தலைவர்  டாக்டர் சேதுராமன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தில்,  ஏழைகளுக்காக மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைப்பது வரவேற்கத்தக்கது. முந்தைய அரசு கட்டிய தலைமை செயலக கட்டிடத்தை ஏழை மக்களுக்கு அர்ப்பணித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று பல்துறை சிறப்பு மருத்துவமனை, சென்னையில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சை என்பதால் தமிழகம் மட்டுல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில மக்களும், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்கு வருவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.  மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்திட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிடுவது போல இனி தமிழ்நாட்டிலும் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்திட அருகிலேயே அரசு மருத்துவ கல்லூரியும் அமைவதால் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமையும்.
சுயநலத்துக்காக, தன் பெயரை தம்பட்டம் அடிப்பதற்காக கடந்த ஆட்சியில் கருணாநிதி கட்டிய கட்டிடம் இன்று ஏழைகளுக்கு உயர்தர சிகிச்சை தரும் மையமாக உருவாவதின் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஒரு வரலாற்று சாதனை நாயகியாக போற்றப்படுவார் என்று டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.

தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத்:
தமிழக முதல்வர்  சட்டபேரவையில் புதிதாக கட்டியுள்ள சட்டப்பேரவை வளாகம், மருத்துவமனையாக மாற்றபட வேண்டுமென்று அறிவிக்கை வெளியிட்டுயிருக்கிறார்.
இது அனைத்து தமிழக மக்களும் வரவேற்று, போற்றக்கூடிய, பாராட்டதக்க செயலாகும். முன்னாள் தி.மு.க. அரசு புதிய சட்டபேரவை கட்டிடம், அரை - குறையாக கட்டி முடித்து சட்டப்பேரவை வளாகத்தையே பார்ப்பவர்கள் எல்லாம், கேலி, கிண்டல் செய்யக்கூடிய அளவிற்கு தண்ணீர்தொட்டி என்றும், தார்பீப்பாய் என்றும் பல கோணங்களிலே விமர்ச்சிக்கத்தக்க வகையில் முற்றுபெறாமலும், செயல்பாடுகள் நடத்தப்பெற முடியாமலும், தலைமை செயலகம் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டு, செயல்பட முடியாத ஒரு நிலையை உருவாக்கி சென்றுயிருந்தார்கள்.
அதை முதல்வர் ஜெயலலிதா சரியானதொரு ஆய்வை மேற்கொண்டு, அவர்கள் வீணடித்த மக்கள் வரிப்பணத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். டெல்லியிலே அமைந்துள்ள ஏயிம்ஸ் மருத்துவமனையை போல், பல்நோக்கு மருத்துவ அமைப்புக்களை செயல்படுத்தக்கூடிய, அதிநவீன மருத்துவமனையாக, புதிய தலைமை செயலக கட்டிடம் மாற்றப்படும் என்றும், ஏ பிளாக் மருத்துவமனையாகவும், பி பிளாக் மருத்துவ கல்லூரியாகவும் செயல்படும் என்ற அறிவப்பு, இந்தியாவின் இறையாண்மையும், ஜனநாயக மக்களாட்சியும், எப்படி நடைப்பெற வேண்டும் என்பதற்கு  எடுத்துக்காட்டாக அமைந்துள்ள, முன்னோடியான அறிவிப்பாகும்.
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், மக்களின் நலனுக்காக மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியுமாக, மாற்றி அமைத்து, தமிழக மக்களின் ஏகோபித்த மாபெரும் ஜெயலலிதா தான் என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்வடிவில் நிரூபித்து காட்டியிருக்கிறார். இதை தமிழ் மாநில முஸ்லிம் லீக் உளமாற வாழ்த்தி வரவேற்கிறது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவசரம் அவசரமாக கட்டத் தொடங்கி, கட்டுமானப்பணிகள் முழுமையடையாமல் அரைகுறையான நிலையில் ஆடம்பரமாக பெரும் பொருட்செலவில் துவக்க விழா கொண்டாடி, புதிய தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிடம் திறக்கப்பட்டது.
ஆனால், இந்த கட்டிடம் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள 36 துறைகளுக்கும் போதுமானதாக இல்லை என்பதையும், பயன்படுத்தக்கூடிய இடப்பரப்பு குறைவாக இருக்கிறது என்பதையும், இருவேறு கட்டிடங்களில் தலைமை செயலகம் செயல்படுவது சாத்தியமில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, முதல்வர் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றமும், தலைமை செயலகமும் இயங்கட்டும் என்று முடிவெடுத்து அந்த வகையிலே சட்டமன்றமும், தலைமை செயலகமும் இயங்கி வருகிறது.
ஆனால் பலநூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், முறையாக, முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் உட்பட பலரும், பல அரசியல் கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்ததோடு, எப்படியெல்லாம்  கட்டிடத்தை  பயன்படுத்தலாம் என்று ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
ஆனால், அனைவரது எண்ணங்களையும் மிஞ்சும் வகையில்  முதல்வர் ஜெயலலிதா இந்த கட்டிடத்தில் ஏ பிளாக் பகுதியின் 97829 சதுர  மீட்டர் பரப்பு கொண்ட இடத்தில் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் பல்வேறு நோய்களுக்கும் தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாக பெரும் வகையில், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைக்க முடிவுசெய்து, சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்பதை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய அரசு முறையாக திட்டமிடாமல் அள்ளித் தெளித்தாற்போல் அமைத்த கட்டிடம் என்றாலும், அது விரயம் ஆகாமல் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சி ஒருபுறம், புதுடெல்லி ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைக்கு இணையாக ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில், நவீன வசதிகளுடன், சென்னை நகரின் மையப்பகுதியில், தரமான மருத்துவமனையும், அதையொட்டி பி பிளாக் கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரியும் அமைய இருக்கிறது என்ற மகிழ்ச்சி மறுபுறம்.
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலை கொண்ட தரமான மருத்துவ சேவையை தாரளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் வரலாற்று சிறப்புமிக்க இன்றைய அறிவிப்பை நெஞ்சார்ந்த நன்றியுடனும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடனும் பாராட்டி வரவேற்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்