முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க கண்பார்வை பதிவு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - விலை ஏற்றஙகளுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசுதான் தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் கூறியதாவது: இலவசம் என்ற சொல்லுக்கு பதிலாக விலையின்றி என்று பெயரிட்டு அதற்கு பெருமை தேடித்தந்தள்ளவர் முதல்வர் ஜெயலலிதா. இவரது இந்த 3 மாத கால ஆட்சியில் 189 நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 1,41,442 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  மொத்தம் உள்ள 1.97 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.84 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது.

இலவச அரிசி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை  ஜூன் மாதம் 3.17 லட்சத்திலிருந்து தற்போது 3.46 லட்சத்திற்கு உயர்ந்துள்ளது.

பொது வினியோகத்திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெயின் அளவு 59,789 கிலோ லிட்டரிலிருந்து 52,806 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 44,572 கிலோ லிட்டராக மேலும் குறைக்கப்பட்டுவிட்டது. தேவையான அளவான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை வழங்கும்படி முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் கோரிக்கைய மத்திய அரசு புறக்கணிக்க நினைத்தால் அவர்களை மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது 129 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 809 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது என்பது போல் தி.மு.க. அரசு திட்டம் போட்டு அரிசியை திருடிக்கொண்டுள்ளது. இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அமைக்கப்பட்ட குழுவை தி.மு.க. கலைத்துவிட்டது. எனவே, இந்த ரோந்துப்பணியை மேற்கொள்ளும் குழு மீண்டும் செயல்பட முதல்வர் ஜெயலலிதாஆணையிட்டுள்ளார்.

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க ஸ்மார்ட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போலி கார்டுகளை ஒழிக்காவிட்டால், உணவுப்பொருட்களை முற்றிலும் அளிக்க முடியாது. எனவே, இந்த ஸ்மார்ட் கார்டுகள் 10 விரல் ரேகை, கண்பார்வை ஆகிய முறைகளை பயன்படுத்தி வழங்கப்பட உள்ளது. 2012ல் அனைவருக்கும் மின்னணு குடும்ப அட்டைகள்(ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும்.

100 நாள் ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் புலம்புகிறார்கள். நடக்க முடியாதவர்கள் நடத்தும் போலி நாடகம் நடக்கவே நடக்காது. 

இவ்வாறு அமைச்சர் புத்திசந்திரன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலுரை வழங்கினார்.

இதன்பின்னர் சில உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பதில்களும் வருமாறு:

ஏ.செளந்தரராஜன்(சி.பி.எம்.): அமைச்சர் இங்கே பதில் அளிக்கும்போது உணவுப்பொருள் கடத்தல் குறித்து கூறுகையில்,  திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது என்று கூறினார். அந்த பாடலின் 3வது வரியாக திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வரும். அது அந்தக்காலத்துக்கு பொருந்தும். ஆனால், இந்த காலத்துக்கு கடுமையான சட்டம் போட்டுத்தான் தடுக்க முடியும். எனவே, ரோந்துப்பணியை அதிகரித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும். 

ஆறுமுகம்(சி.பி.ஐ): சில இடங்களில் உள்ள பகுதி நேர கடைகளில் உணவுப்பொருள் வாகனங்களுக்கான ஏற்றுகூலி, இறக்கு கூலி ஆகிய செலவினங்களை மக்களே ஏற்க வேண்டியுள்ளது. இதனை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ: மத்திய அரசு தரவேண்டிய தொகை ரூ.324 கோடியை இன்னும் தரவில்லை. அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். இந்த நிபந்தனைகள் குறித்து முதல்வர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பார்.

கே.ஏ.கிருஷ்ணசாமி(புதியதமிழகம்): ஆன்லைன் வர்த்தகத்தால் பொருட்களின் விலை, ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வர்த்தகம் தடை செய்யப்படுமா?

முதல்வர் ஜெயலலிதா: ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டுமானால் அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். 

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்