முக்கிய செய்திகள்

தேசத் துரோகிகளை நசுக்குங்கள் - கடாபி வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி,ஆக.23 - அரசை எதிர்த்து போராடி வரும் தேச துரோகிகளை அடியோடு நசுக்குங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு லிபிய அதிபர் கடாபி வேண்டுகோள் விடுத்தார். லிபிய தலைநகர் திரிபோலியில் கடாபி ஆதரவாளர்களுக்கும், அரசு எதிர்ப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. நகரின் பல பகுதிகளில் இருந்தும் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நகரின் மேல் பகுதியில் நேட்டோ போர் விமானங்கள் வட்டமிட்டு கொண்டிருந்தன. கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி விழும் தருவாய் நெருங்கி விட்டது என்று அரசு எதிர்ப்பு படையினர் உரக்க அறிவித்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் அரசு எதிர்ப்பாளர்களை நசுக்கியே தீருவோம் என்று கடாபி சவால் விடுத்தார். அணிவகுத்து சென்று தேச துரோகிகளை நசுக்குங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். கடாபியின் இந்த வேண்டுகோள் அரசு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இதைக் கேட்டதுமே அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். 

லிபியாவின் முக்கிய தலைநகரங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அரசு எதிர்ப்பு படையினர் கூறுகின்றனர். ஆனால் அனைத்து நகரங்களுமே தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்று கடாபி கூறுகிறார். இப்படி இரு தரப்பினரும் முரண்பட்ட கருத்துக்களை கூறுவதால் உண்மையிலேயே அங்கு என்ன நடக்கிறது என்பது புதிராகவே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: