முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு காளிங்கராயன் விவசாயிகளுக்கு கல்லறை கட்டிய கருணாநிதி அரசு

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு -5 - ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் வாய்க்கால் விவசாயிகளின் நலன் கருதியும், குடிநீருக்காகவும் உண்டாக்கப்பட்டது.   பவானி ஆற்றிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது.  விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 1264-ஆம் வருடம் காளியங்கராய கவுண்டர் என்பவரால் 746 வருடத்திற்கு முன்பு கால்வாய் கட்டப்பட்டது.  சுமார் 34 கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளின் ஜீவநாடியாக  இருந்துவந்தது இந்த கால்வாய். பல நூறு வருடங்களாக விவசாயத்திற்கும், பொதுமக்களின் சுத்தமான குடிநீர் தேவைக்கும்  ஆதாரமாக விளங்கிவருகிறது. 

சமீபகாலமாக இந்த கால்வாயில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்பல போராட்டங்களை நடத்தின.  இதனால் அரசாங்கம் காளிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை சார்பில்  கான்கிரீட் தடுப்பு சுவரை 5.650 கி.மீட்டர் நீளம் மற்றும் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டும் பணிக்காகவும், பழுதடைந்த பழைய 296 மதகுகளை இடித்துவிட்டு புதிய  கான்கிரீட் மதகுகளை கட்டவும்,  இடது புற மண் கரையை பலப்படுத்தி மண் கொட்டவும், கால்வாயின் இடது புறத்தில் பழுதடைந்த இடங்களில் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும்  ரூ.11.75 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.  ஒரு வருடத்திற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இத்திட்டத்தை அறிவித்தவுடன் இப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். 

ஆனால் விவசாயிகளின் எண்ணங்களுக்கு விரோதமாகவும் மற்றும் பொதுமக்களுக்கு சமாதி கட்டும் விதமாகவும் காளிங்கராயன் வாய்க்காலில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. 

கட்டப்பட்ட தடுப்பு சுவர் சரியான உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவுநீர் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. மேலும் மெகா மோசடியாக தடுப்பு சுவர் எழுப்பி அதில் கழிவுநீர் தேங்குவதுபோல  பொதுமக்கள் பார்வைக்கு காண்பித்து,  கழிவுநீர் இனி வாய்க்காலில் கலக்காது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுப்பணித்துறையினர் சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலாளிகளிடம் கையூட்டை பெற்றுக்கொண்டு,  தடுப்பு சுவரின் அடியில் மெகா கான்கிரீட் சிமெண்ட் குழாய்களை  பதித்து கழிவுநீரை நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்க வைத்து விவசாயிகளையும், பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளனர். இதனால் இப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடக்கூடிய காரியத்திற்கு  உறுதுணையாக இருந்துள்ளனர்.   

மேலும் வாய்க்காலின் இடதுகரையின்  பழுதடைந்த இடங்களை மண்ணைக் கொட்டி பலப்படுத்தி உள்ளோம் எனக்கூறி, மண்ணை கொட்டாமல் இருப்பதை இடதுபுற கரையின் மேற்பாதையை பார்த்தாலே புரியும். ஆனால் இப்பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டதாக  கணக்கு காட்டப்பட்டு சுமார் 15 லட்சத்திற்கு  பில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிகளை பார்வையிட தற்காலிக பணியாளர்களை நியமித்து உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம் ரூ. 3,670 சம்பளம் 12.4.2010 முதல் 11.10.2010 வரை கொடுத்துள்ளதாகவும் கூறி, பணியாளர்களை பணியில் அமர்த்தாமலேயே சம்பளம் வழங்கியதாக கூறி ரூ.12 லட்சம் அளவுக்கு  மோசடி செய்து உள்ளனர். மேலும் கழிவுநீர் தடுப்பு சுவர் ஒப்பந்தத்தில் கூறியதுபோல் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவு நீர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலிலேயே கலக்கிறது. இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.  பழைய மதகுகள் 294 புதுப்பித்தல் மற்றும் கான்கிரீட் மதகுகள் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். இதில் பல இடங்களில் பழைய மதகுகளை சிமெண்ட் பூசி புதிய மதகுகளாக கணக்கு  காட்டி ரூ.2.50 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.  மேலும் கரை ஓரங்களில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களையும் வெட்டி கடத்தி உள்ளனர். 

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த இப்பணிக்கு ஒதுக்கப்பட்ட 11.75 கோடி பணம் முறையாக செயல்படுத்தப்படாததால் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது. பொதுப்பணியை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் இதில் பங்கு உண்டா என நாட்டின் மீது அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்பணி என்ன நோக்கத்திற்கு தீட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே,  விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடையாமல் திட்டம் தீட்டியவர்களே பயனடைந்து உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்தையே சீரழிக்கக்கூடிய விதத்திலும், குடிதண்ணீரில் சாயபட்டறை கழிவுகளை கலக்கவிட்டு பொதுமக்களின் உயிர்களோடும் விளையாடுகின்ற விதத்தில் இந்தபணிகள் நடைபெற்றுள்ளன. முதல்வர் கவனிக்கும் இலாகாவான பொதுப்பணித்துறையிலேயே இத்தகைய ஊழல்கள் நடந்திருப்பது மிகவும்  வெட்கக்கேடானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்