முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா ஹசாரேயின் நிபந்தனைகள் ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.28 - அண்ணா ஹசாரே விதித்த நிபந்தனைகளுடனான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விட மத்திய அரசு சம்மதித்திருப்பதால் அண்ணா ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி காந்தீயவாதி அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் ஹசாரேயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏதாவது விபரீத விளைவு ஏற்பட்டுவிடும் என்பதற்காக ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். உண்ணாவிரதத்தை நிறுத்த 3 நிபந்தனைகளை லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும். அது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா ஹசாரே கூறினார். அரசு கீழ்மட்ட ஊழியர்களையும் லோக்பால் மசோதாவுக்குள் உட்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் உரிமை சாசனம் வைக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை அண்ணா ஹசாரே முன்வைத்தார். இந்த நிபந்தனைகளை ஏற்க மத்திய அரசு முதலில் மறுத்தது. பின்னர் இந்த நிபந்தனைகளை ஏற்று பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு இல்லாத தீர்மானம் மூலம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்றுக்கொள்ள அண்ணா ஹசாரே குழுவினர் மறுத்துவிட்டனர். மேலும் இது துரோகச் செயல் என்றும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அண்ணா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர்.  இதனையடுத்து  இந்த தீர்மானத்தை குரல் ஓட்டெடுப்புடன் கூடிய கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தது. இதுகுறித்து அண்ணா ஹசாரே குழுவினர்களுக்கும் மத்திய அரசு தெரிவித்தது. இதனால் அண்ணா ஹசாரே குழுவினர் மகிழ்ச்சியையும் சம்மதத்தையும் தெரிவித்தனர். இதனையொட்டி ஹசாரேயின் நிபந்தனைகள் அடங்கிய தீர்மானத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபையில் தாக்கல் செய்தார். தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மற்றும் இதர கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். தம்பிதுரை பேசும்போது லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்றும் அதேசமயத்தில் பிரதமருக்கு பாதுகாப்பாக லோக்பால் மசோதாவில் விதிமுறைகளும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதால் லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரை கொண்டுவர எங்கள் முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்றார். விவாதத்திற்கு பின்னர் பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இயந்திரம் போல் செயல்படுவது அல்ல இந்திய ஜனநாயகம்.ஹசாரேயின் நிபந்தனைகள் ஏற்கப்படும் அதேசமயத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் மேன்மை காக்கப்பட வேண்டும் என்றார். முகர்ஜியின் பதிலுக்கு பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதில் அரசு கீழ் மட்ட ஊழியர்கள் லோக்பால் மசோதாவுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேசமயத்தில் மக்கள் உரிமை சாசனத்தை அரசு அலுவலகங்களில் வைக்கப்படுவது. மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது  குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 3 நிபந்தனைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதால் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரத்தை வாபஸ் பெறுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அவர் இரவு நேரத்தில் உண்ணாவிரத்தை கைவிடமாட்டார். அதனால் இன்று காலையில் அவர் உண்ணாவிரத்தை கைவிடுகிறார்.

3 நிபந்தனைகள் ஏற்கப்பட்டதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று அண்ணா ஹசாரேயின் செய்தி தொடர்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரத்தை வாபஸ் பெறுவதால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி குறைந்துவிட்டது. அதேசமயத்தில் ஒரு தனி மனிதனின் சக்தி எவ்வளவு பெரியது. அதுவும் அகிம்சை வழி போராட்டம் எத்தகைய சக்தி வாய்ந்தது என்பது அண்ணா ஹசாரே மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தையே தனது உண்ணாவிரதம் மற்றும் அகிம்சை வழியில் துரத்தி அடித்த பெருமை காந்திக்கு உண்டு. அதனால்தான் அவர் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி நமது நாட்டுக்கு மட்டுமல்லாது உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அவர் வழியில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். உண்மையிலேயே இவர் காந்தீயவாதி மட்டுமல்லாது இந்திய மக்களுக்கே அவர் அண்ணாதான் என்றால் அது மிகையாகாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony