முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேன் கலந்த இளநீர் அருந்தி 13 நாட்கள் இருந்த உண்ணாவிரத்தை முடித்தார் அண்ணா ஹசாரே

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 29 - ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அண்ணா ஹசாரே 13 நாட்கள் வரை இருந்த உண்ணாவிரதத்தை நேற்றுக்காலையில் தேன் கலந்த இளநீர் அருந்தி முடித்துக்கொண்டார். இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்தது. அதேசமயத்தில் தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே அடுத்த கட்ட இலக்கு என்றும் ஹசாரே தெரிவித்துள்ளார். நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி பிரபல காந்தீயவாதியான அண்ணா ஹசாரே, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். இதனையொட்டி ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தது. லோக்பால் மசோதாவுக்கான விதிமுறைகளை உருவாக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் அண்ணா ஹசாரே தலைமையில் சிவில் உறுப்பினர்கள் 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் தனித்தனியாக லோக்பால் மசோதாவுக்கான வரைவு மசோதாவை தயாரித்தன. ஹசாரே தலைமையிலான சிவில் குழுவினர் தயாரித்த வரைவு மசோதாவின் கீழ் பிரதமர், நீதிபதிகள், உயரதிகாரிகள் ஆகியோர்கள் சேர்க்கப்பட்டனர். அரசு தரப்பு குழுவினர் தயாரித்த வரைவு மசோதாவில் பிரதமர், நீதிபதிகள், உயரதிகாரிகள் சேர்க்கப்படவில்லை. இதனால் வரைவு மசோதா தொடர்பாக மத்திய அரசு குழுவிற்கும் சிவில் குழுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாட்டை போக்க இரண்டு குழுவினரும் சுமார் 10 தடவைகள் சந்தித்து பேசினர். அப்போதும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனையொட்டி தமது நிலைக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, எல்.கே. அத்வானி உள்பட அரசியல் தலைவர்களை ஹசாரே சந்தித்து பேசினார். ஆனால் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவராவிட்டால் மீண்டும் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே அறிவித்தார். இதனால் பயந்துபோன மத்திய அரசு அவரசக்கோலத்தில் அரசு தரப்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதேசயத்தில் ஹசாரே அறிவித்தபடி கடந்த 16-ம் தேதி ஹசாரே டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இரண்டு நாட்கள் பார்த்தது. ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடக்கத்தொடங்கின. இதனால் மத்திய அரசுக்கு கிலி ஏற்பட்டது. ஹசாரயின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அதனையடுத்து பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கம் என்றார். ஹசாரேயின் உடல்நிலை குறித்து கவலைப்படுவதாகவும் அதனால் ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பிரதமர் பேசும்போது கேட்டுக்கொண்டார். ஹசாரேயின் உண்ணாவிரதத்தை நிறுத்த அனைத்துக்கட்சியினரும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றால் 3 நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹசாரே கூறினார். கீழ் மட்ட அரசு ஊழியர்களையும் லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்கு உட்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் உரிமை சாசன பிரதிகளை வைக்க வேண்டும். எல்லா மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகள் அடங்கிய ஓட்டெடுப்புடனான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை வலுவான லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று ஹசாரே நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் லோக்பால் ஆயுக்தா அமைப்பு மற்றும் அரசு அலுவலகங்களில் அடிப்படை குறித்த கையடுக்க சாசனம் வைப்பது தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு சார்பாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து அண்ணா ஹசாரே தனது 13 நாள் உண்ணாவிரத்தை நேற்றுக்காலையில் சரியாக 10.20 மணிக்கு முடித்துக்கொண்டார். உண்ணாவிரதத்தை தலித் சிறுமி சிம்ரன்,முஸ்லீம் சிறுமி இக்ரா ஆகியோர் ஒரு டம்பளரில் தேன் மற்றும் இளநீர் ஆகியவைகளை கலந்து ஹசாரேவுக்கு கொடுத்தனர். அதை ஹசாரே அருந்தி தனது 13 வது நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதன் மூலம் அவர் கடந்த 13 நாட்களாக சுமார் 288 மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். உண்ணாவிரதத்தை முடித்தவுடன் அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஹசாரே உருக்கமாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் எனது அடுத்த கட்ட இலக்கு தேர்தல் சீர்திருத்தம்தான். அதாவது தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரக்கோரி போராட்டம் நடத்துவேன் என்ற அர்த்தத்தில் ஹசாரே கூறினார். போராட்டத்தை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்துள்ளேன். பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி அதை நீங்கள் சாதிக்கும் வரை நான் ஓய மாட்டேன் என்றார். அப்போது மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மூவரண தேசிய கொடியை தூக்கிப்பிடித்து ஆட்டியும் அண்ணா ஹசாரே ஜிந்தாபாத் என்றும் முழக்கம் போட்டனர். ஹசாரேவுடன் அவரது நெருங்கிய சகாக்களான சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், அரவிந்த் கேஜிரிவால், கிரண்பேடி, மணீஷ் சிசோதியா, ஆகியோரும் இருந்தனர். பாராளுமன்றத்தில் நாம் ஏற்படுத்திய சாதனையானது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். ராம்லீலா மைதானத்தில் என்னுடன் இருந்து ஆதரவு அளித்தவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். மக்கள் பாராளுமன்றமானது டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை விட பெரியது. அதனால்தான் மக்கள் பாராளுமன்றம் கூறுவதை டெல்லியில் உள்ள பாராளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ஊழலில் இருந்து இந்த நாடு விடுபடும் என்ற நம்பிக்கையை இந்த போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் புதிய சட்டங்களை நாம் நிறைவேற்றலாம். என்னுடைய 3 நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது நாட்டிற்கு கவுரவமும் பெருமையுமாகும். கடந்த 13 நாட்களாக நான் இருந்த உண்ணாவிரதத்தால் நல்ல பலன் கிடைத்துள்ளது. அடுத்து தேர்தல் மற்றும் கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்றும் ஹசாரே கூறினார். தேர்தல் சீர்திருத்தத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு திரும்பப்பெறும் அதிகாரம் வேண்டும். அப்போதுதான் ஓட்டுச்சீட்டில் வேட்பாளர்களை நாம் நிராகரிக்க முடியும். அதை நாம் செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்று பெரும்பாலானோர்கள் கூறிவருகிறார்கள். தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் மக்கள் கூறுகிறார்கள். தேர்தலில் வேட்பாளர்கள் அதிக அளவு செய்கிறார்கள். ஒரு வேட்பாளர் ஒரு தடவை ரூ. 10 கோடி வரை செலவு செய்கிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை முன்னேற நாம் அயராது பாடுபட வேண்டும். கல்வி வியாபாரமாக்கப்படுவது பெரும் கவலை அளிக்கிறது. கல்வியை பலர் வர்த்தகமாக்கியுள்ளனர். அவர்கள் கடைகளை திறந்து உள்ளனர். ஏழைகளும் தரமான கல்வி பெற வேண்டும். இதற்கு கல்வித்துறையில் சீர்திருத்தம் தேவை என்று கூறிய ஹசாரே, இந்த போராட்டமானது டெல்லி பாராளுமன்றத்தைவிட மக்கள் பாராளுமன்றம் பெரியது என்பதை நிரூபித்துள்ளது என்றார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், நமக்கெல்லாம் ஒரு தூண்டுகோலாக இருக்கிறார். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எம்.பி.க்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இல்லாமல் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று ஹசாரே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony