முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 31 - குஜராத் மாநிலத்தில் முதல்வரை கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா அமைப்பை கவர்னர் ஏற்படுத்தி இருப்பதற்கு பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையொட்டி லோக்சபை நேற்றுமதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.  கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை சுப்ரீம்கோர்ட்டு ஏற்படுத்தியது. எடியூரப்பா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை இந்த லோக் ஆயுக்தா அமைப்பு விசாரித்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில் எடியூரப்பா மீது குற்றஞ்சாட்டியதையொட்டி அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். கர்நாடக மாநிலத்தில் ஏற்படுத்தியதுபோல் குஜராத் மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை அந்த மாநில கவர்னர் கம்லா பெனிவால் அமைத்துள்ளார்.
இந்த பிரச்சினையை லோக்சபையில் நேற்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக் ஆயுக்தா அமைப்பை கவர்னர் அமைத்திருப்பதோடு முதல்வர் நரேந்திர மோடியை கலந்தாலோசிக்காமல் செய்திருப்பது ஜனநாயக விரோதமாகும் என்றும் பா.ஜ. உறுப்பினர்கள் கூறினார். நேற்று லோக்சபை கூடியதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கைகளில் பிடித்துக்கொண்டு சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடியை கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தாவை கவர்னர் நியமித்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமாகும் என்று கோஷமிட்டனர். குஜராத்தில் ஜனநாயக படுகொலைக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். குஜராத்தில் கவர்னர் மாளிகையானது காங்கிரஸ் மாளிகையாக மாறிவிட்டது என்றும் அவர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களுடைய இருக்கைகளில் இருந்து எழுந்து படுகொலை செய்யப்பட்ட பா.ஜ. தலைவர் ஹரன் பாண்டியாவின் படத்தை காட்டினர். இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை குஜராத் ஐகோர்ட்டு விடுதலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஜமாஜ்வாடி கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் ஏதோ கோஷம் போட்டுக்கொண்டு சபையின் மத்திய பகுதிக்கு சென்றனர். அப்போது சபையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்ததால் அவர்கள் கூறியது சரியாக கேட்கவில்லை. கூச்சல் குழப்பத்திற்கு இடையே முதல் கேள்வியை சபாநாயகர் மீரா குமார் எடுத்தார். கூச்சல் குழப்பம் அடங்காததால் சபையை மதியம் வரை ஒத்திவைத்தார்.
குஜராத் மாநிலத்தில் நீதிபதி ஆர்.ஏ. மேத்தா தலைமையில் லோக் ஆயுக்தா அமைப்பை கவர்னர் நியமித்துள்ளார். மாநில முதல்வரை கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தாவை கவர்னர் அமைப்பது அரசியல் சட்டம் 163-வது பிரிவின் கீழ் குற்றமாகும். அமைச்சரவையில் ஆலோசனையின்படிதான் கவர்னர் செயல்பட வேண்டும் என்று அந்த சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த நடவடிக்கை கூட்டமைப்பு தத்துவத்திற்கு எதிரானது என்று பாரதிய ஜனதா கருதுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!