முக்கிய செய்திகள்

கடாபி ஜிம்பாப்வேயில் தஞ்சம்? குடும்பத்தினர் அல்ஜீரியாவுக்கு ஓட்டம்

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி, செப். - 1 - லிபிய அதிபர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட கடாபி ஜிம்பாப்வேயில் தஞ்சமடைந்திருக்கலாம் என்று இங்கிலாந்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அல்ஜீரியாவிற்கு தப்பியோடிவிட்டார்கள். லிபியாவில் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியில் ஈடுபட்டிருந்த அதிபர் மும்மத் கடாபி மக்கள் புரட்சியின் காரணமாக பதவியில் இருந்து இறக்கப்பட்டார். ராணுவத்திற்கும் புரட்சிப் படையினருக்கும் ஏற்பட்ட கடுமையான சண்டைக்குப்பின் கடாபி தலைமறைவானார். புரட்சிப் படைக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உதவிபுரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடாபியை உயிரோடு அல்லது கொன்றோ பிடிப்பவருக்கு 8 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்சியாளர்கள் கடாபி வேறு நாடுகளுக்கு தப்பியோடவில்லை. அவர் லிபியாவிலேயே பதுங்கி இருக்கிறார் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் கடாபி குறித்து இங்கிலாந்து நாளிதழான டெய்லி மெயிலில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- மும்மத் கடாபி, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் கடந்த வாரம் ஜிம்பாப்வே என்று இறங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தியை முகாபேயின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். ஒருவேளை கடாபி ஜிம்பாப்வேயில் தஞ்சம் புக அனுமதி கேட்டால் அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு சரம்பா பதிலளிக்க மறுத்துவிட்டார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடாபி ஜிம்பாப்வேயில்தான் தங்கி இருக்கிறார் என்று ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த புதன் கிழமையே ஹராரே வந்துவிட்டதாகவும், அன்று ஜிம்பாப்வேயில் மின்சாரம் தடைப்பட்டது என்றும் கடாபி வருவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கின்றனர். முகாபேயின் அரசியல் எதிரிகள் கடாபி ஜிம்பாப்வே வந்திறங்கியதை பார்த்ததாகவும் டெய்லி மெயில் மேலும் தெரிவித்துள்ளது. கடாபியுடன் அவரது மகன் சைப் அல் இஸ்லாமும் தப்பித்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடாபியின் மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: