முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் 3-வது நாளாக கூச்சல்-குழப்பம்: சபை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 3 - கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது போல் குஜராத் மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைக்க அந்த மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி லோக்சபையில் நேற்றும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  தனால் சபையை பல மணி நேரம் சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.  கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா மீது நிலம் மற்றும் சுரங்க ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. இதுகுறித்து விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த லோக் ஆயுக்தா அமைப்பானது எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதற்கு ஆதாரம் உள்ளது என்று கூறியது. இதனையொட்டி முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். அதேமாதிரி குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்க அந்த மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நரேந்திர மோடியை கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதாக கூறி பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரச்சினையை எழுப்பி வருகின்றனர். இதனால் நேற்று 3-வது நாளாக லோக்சபையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர். சர்வாதிகாரமாக நடநது கொள்ளும் குஜராத் கவர்னர் கமலா பெனிவாலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற இருசபைகளிலும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் மத்திய பகுதிக்கு வந்து ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எடுபடாது,அரசியல் சட்டம் மீறலை அனுமதிக்க முடியாது என்று கோஷம் போட்டனர். லோக் ஆயுக்தா அமைக்க உத்தரவிட்டதையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரினர். இதனால் ராஜ்யசபையில் பெரும் கூச்சல் குழப்பமாக இருந்ததால் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. சபை கூடியும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை எழுப்பியதால் முதலில் 15 நிமிட நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து மதியம் வரையும், பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபையில் கேள்வி நேரம் சுமூகமாக நடைபெற்றது. கேள்வி நேரத்திற்கு பின்னர்தான் இந்த பிரச்சினையை பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுப்பி கூச்சல் குழப்பம் செய்தனர். இதனால் சபையை நடத்த முடியாததால் அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த தம்பித்துரை எம்.பி. சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் இரண்டாவது தடவையாகவும் சபை ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்