முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 3 - தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்பு கருவிகளால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை என்று லோக்சபையில் எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர். பாராளுமன்றத்தின் லோக்சபையில் கேள்வி நேரத்தின்போது சில எம்.பி.க்கள் சூரிய சக்தி மின்சாரம் குறித்து தங்களது கவலைகளை தெரிவித்தனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்சார கருவிகளால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை என்று அவர்கள் வேதனையோடு கூறினர். இதுகுறித்து பா.ஜ.க. உறுப்பினர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு வீடுகளின் கூரைகளின் மீது சூரிய சக்தி மின்சார தயாரிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் சரியான முறையில் செயல்படவில்லை. இந்த கருவிகளில் இருந்து ஓசைகள்தான் வருகின்றனவே தவிர இவை மின்சாரத்தை தயாரித்து கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில்  இந்த சூரிய சக்தி மின்சார கருவிகளால் ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட சூடாக்க முடியாது என்றார். அப்போது புதுப்பிக்கும் எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா எழுந்து, எனது வீட்டில் உள்ள சூரிய சக்தி மின்சார கருவிகள் நன்றாகத்தான் இயங்குகின்றன. நான் அதிலிருந்துதான் சுடுதண்ணீரை பெறுகிறேன்  என்று கூறினார். மேலும் தனக்கு அருகில் இருந்த நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவைப் பார்த்து அப்படித்தானே என்று கேட்டார். அவரும் ஆமாம் எனது வீட்டிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் கட்சி பாகுபாடு இல்லாமல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் எழுந்து அமைச்சர் அப்துல்லாவின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். தங்கள் வீட்டு சூரிய சக்தி தயாரிப்பு உபகரணங்கள் சரிவர இயங்கவில்லை என்று ஒருமித்த குரல் எழுப்பினர். அப்போது பேசிய அமைச்சர் பரூக் அப்துல்லா இந்த சூரிய சக்தி உற்பத்தி கருவிகளை பொருத்தி அதை பராமரித்து வருவது மத்திய பொதுப் பணித்துறைதான் என்றும் எம்.பி.க்களின் இந்த புகார் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்துல்லா தெரிவித்தார். இந்த சூரிய சக்தி மின்சார தயாரிப்பு கருவி வீண் செலவுதான் என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும் குறிப்பிட்டார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்