முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது -கல்யாண்சிங்

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, செப்.- 3 - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் தனது ஜன் கிரந்தி கட்சி கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் கல்யாண்சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்துகொண்டு இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல உ.பி.யில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆளும் பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றொரு பிரதான கட்சியான சமாஜ்வாடி கட்சி உ.பி. முழுவதும் ரத யாத்திரை மற்றும் சைக்கிள் யாத்திரையை செப்டம்பர் 12 முதல்  நடத்த இருக்கிறது.  இந்த நிலையில் ஜன் கிரந்தி என்ற புதிய கட்சியை துவக்கியுள்ள உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டதற்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற  பேச்சுக்கே இடமில்லை என்று கல்யாண்சிங் திட்டவட்டமாக மறுத்தார். உ.பி. மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க. இழந்துவிட்டது. அதனால் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். தங்களது கட்சியின் சட்டமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது என்றும், இரண்டாவது பட்டியல் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்