முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: 8 செல்போன் நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்தாகிறது

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,செப்.- 4 - ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியது. கடந்த 2010 ம் ஆண்டில் இது தொடர்பாக அறிக்கை வெளியானது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முன்னால் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா உட்பட தனியார் டெலிகாம் அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இம்மாத மத்தியில் 3 வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. அப்போது மேலும் சில முக்கிய பிரமுகர்கள் இதில் சிக்குவார்கள். ஆ. ராசா அமைச்சராக இருந்த போது தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 69 லைசென்ஸ்களையும் ரத்து செய்யுமாறு டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு சிபாரிசு செய்தது.  இதில் முதல் கட்டமாக 8 நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் 2 லைசென்ஸ்கள், எடிசலாட்டின் 2 லைசென்ஸ்கள், சில்டெமாஷியாம் நிறுவனத்தின் ஒரு லைசென்ஸ் ஆகியவற்றை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் சிபாரிசு செய்து இருந்த மற்ற நிறுவனங்கள் தங்களது 61 லைசென்ஸ்களுக்கான கூடுதல் தொகையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கருணாநிதி டி.விக்கு முறைகேடாக பணம் கொடுத்த நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. டைனமிக்ஸ் ரியாலிட்டி, கான்வுட் கண்ஸட்ரக்சன்ஸ், நிக்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ், டி.பி.ரியாலிட்டி ஆகியவற்றின் வங்கி கணக்குகள் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகியவற்றை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு லைசென்ஸ் வழங்க அந்த நிறுவனத்தின் அதிபர் ஷாகித் பல்வாவுக்கு சொந்தமான டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கருணாநிதி டி.விக்கு முறைகேடாக ரூ. 200 கோடி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கலைஞர் டி.வி. பங்குதாரர்கள் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பண பரிவர்த்தனை தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்காக சொத்துக்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. தற்போது 5 நிறுவனங்களின் சொத்துக்களை அந்நிய செலவாணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவே 2 ஜி வழக்கில் சொத்துக்களை முடக்குவதற்கு பிறப்பிக்கப்படும் முதலாவது உத்தரவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்