முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சுரங்க ஊழல்: ஜனார்த்தன ரெட்டி கைது

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

பெங்களூர், செப்.6 - கர்நாடகத்தைச் சேர்ந்த  ஜி. கருணாகர ரெட்டி,  ஜி. ஜனார்த்தன ரெட்டி,  ஜி. சோமசேகர ரெட்டி  ஆகியோருக்கு  சொந்தமான  ஒபலாபுரம்  சுரங்க கம்பெனி ஆந்திராவில் பல இடங்களில் இரும்பு தாது சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்த கம்பெனி அனுமதியில்லாமல் இரும்பு தாதுக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதை அடுத்து இவர்கள் மீது  கர்நாடக லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோத சுரங்க ஊழல்  தொடர்பாக லோக் அயுக்தா நீதிமன்றம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இதில்  சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகள் மூலம் பல  கோடி ரூபாய்க்கு  மோசடிகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

 

இந்த அறிக்கையின் அடிப்படையில்  விசாரணை நடத்தலாம் என்று  கர்நாடக கவர்னர் பரத்வாஜ்  உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து  ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களது கம்பெனியின் நிர்வாகிகள் மீது  சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குகளை பதிவு  செய்தனர்.
ஜனார்த்தன ரெட்டி அவரது மைத்துனரும் ஒபலாபுரம் சுரங்க கம்பெனியின் நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோரை  சி.பி.ஐ.அதிகாரிகள் நேற்று  கைது செய்தனர்.
இவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  சி.பி.ஐ.அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைக்கு பிறகு இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும்,  இந்த  சோதனையின் போது 4.5 கோடி ரொக்க பணமும்,  30 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்  சி.பி.ஐ.அதிகாரிகள்  தெரிவித்தனர். ஜனார்த்தன ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய சோதனைகளில் ரூ. 3 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீனிவாச ரெட்டியின் வீட்டில் இருந்து 1.5 கோடி ரொக்கம் பறிமுதல்  செய்யப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் இருவரையும் ஐதராபாத்திற்கு அழைத்து  சென்று  அங்கு  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் சி.பி.ஐ. டி.ஐ.ஜி., பி.வி.லட்சுமி நாராயணன் கூறினார். இவரது  தலைமையில் 15 சி.பி.ஐ. அதிகாரிகள் குழுதான் இந்த சோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
பெங்களூர் மற்றும் பெல்லாரி நகரங்களில் நடந்த  சோதனைகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக  லட்சுமிநாராயணன் கூறினார்.
ஆந்திர பிரதேசத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு  செய்த வழக்குகளின் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனார்த்தன ரெட்டியின் பெல்லாரி , பெங்களூர்  வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று நாள் முழுவதும் சோதனைகளை நடத்தினர்.
பெல்லாரியில் ஜனார்த்தன் ரெட்டியின் மனைவி அருணா லட்சுமியிடம்  சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோக் அயுக்தா அறிக்கையில் ரெட்டி  சகோதரர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரெட்டி  சகோதரர்கள்  தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா  செய்தனர்.  இதை அடுத்து இவர்களின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமுலு ரெட்டி தனது  எம்.எல்.ஏ.பதவியை நேற்று ராஜினாமா  செய்தார். இவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே இந்த கைது  நடவடிக்கை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2009 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி  ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த விசாரணைக்கு ஆந்திர பிரதேச ஐகோர்ட்டு 2009  டிசம்பர் 14 ல் இடைக்கால தடை விதித்தது. ஆனால் இந்த இடைக்கால தடை   2010 டிசம்பர் 20 ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகே இந்த வழக்கில் சி.பி.ஐ. தீவிரம் காட்டி இப்போது ஜனார்த்தன் ரெட்டியை கைது  செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago