முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிலீக்ஸ் உரிமையாளர் மீது மாயாவதி பாய்ச்சல்

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, செப்.7 - தன்னைப் பற்றி தவறாக தகவல் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளருக்கு உ.பி. முதல்வர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கி லீக்ஸின் உரிமையாளருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் அவர் சாடியுள்ளார். உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களைப் பற்றியும்  ரகசிய தகவல்களை வெளியிட்டு பிரபலமடைந்துவரும்  விக்கி லீக்ஸ் இணையதளம்,  சமீபத்தில் உ.பி. முதல்வர் மாயாவதியைப் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. தனக்கு பிடித்தமான செருப்புகளை வாங்கி வருவதற்காக  மும்பைக்கு ஒரு தனி  விமானத்தையே மாயாவதி அனுப்பிவைத்திருந்ததாக விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உ.பி. முதல்வர் மாயாவதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இது ஒரு தவறான, விஷமத்தனமான தகவல் என்றும் தனது பகுஜன் சமாஜ் கட்சி அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மாயாவதி கூறினார். தான் அப்படி மும்பைக்கு எதற்காகவும் விமானத்தை அனுப்பி வைக்கவில்லை என்றும் இந்த தகவல் தனது அரசிய எதிரிகளின் சதியோடு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அந்த விக்கி லீக்ஸ் இணையதள அதிபருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என்றும் அவர் சாடினார்.
உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதால் தனது ஆட்சிக்கு எதிராக இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிட்டு அரசியல் எதிரிகள் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற தகவல்கள் குறித்து  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளரை அந் நாட்டு அரசாங்கம் ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். வேண்டுமென்றால் எங்களது மாநிலத்தில் ஆக்ராவில்  உள்ள மனநோயாளிகள் காப்பகத்தில் அவரை சேர்க்கலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தான்  தயாராக இருப்பதாகவும்  மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்