முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் மன்மோகன் சிங்கிற்கு அமோக வரவேற்பு

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

டாக்கா,செப்.7  - வங்கதேசத்திற்கு 2 நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டாக்கா விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சிவப்பு கம்பள விரிப்புடன் 19 குண்டுகள் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு பிரதமர் ஷேக் ஹசினாவே நேரில் வந்து மன்மோகன் சிங்கை வரவேற்றார்.
பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இருந்தது. பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற முஜிபுர் ரஹ்மான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. முஜிபுர் ரஹ்மானை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை தூக்கில் போட்டு கொன்றுவிட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் விடுவிக்கப்பட்டார். வங்கதேசம் விடுதலை அடைய இந்தியா பெருமளவில் உதவி செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தது. ஆனால் போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததோடு பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 லட்சம் பேர் சரணடைந்தனர். கிழக்கு பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டு வங்கதேசம் என்ற பெயரில் சுதந்திரம் அடைந்தது. வங்கதேசத்தையொட்டி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இருக்கின்றன. அப்படி இருந்தபோதிலும் வங்கதேசத்தின் இறையாண்மையை இந்தியா மதித்து நடக்கிறது. அந்த நாட்டிற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. சணல் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் வங்கதேசம் இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும். இதை தடுக்க இந்தியா உதவி செய்து வருகிறது. இருநாடுகளிடையே நெருங்கிய நட்புறவு இருந்து வருகிறது. இருநாட்டு தலைவர்களும் அடிக்கடி சென்று வருகிறார்கள்.
இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று புதுடெல்லியில் இருந்து டாக்கா சென்றார். டாக்கா விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவே நேரில் சென்று பிரதமரை வரவேற்றார். மேலும் 19 குண்டுகள் முழுங்க சிவப்பு கம்பள விரிப்புடன் மன்மோகன் சிங்கிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. டாக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியதும் பிரதமர் மன்மோகன் சிங் டாக்காவின் புறநகர் பகுதிக்கு சென்றார். அங்கு வங்கதேச விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இந்த இரண்டு நாட்கள் பயணத்தின்போது இருநாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. எல்லைப்பிரச்சினை, நீர்வள பங்கீடு, வர்த்தக பரிமாற்றம், மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, நாடு கடத்தல் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. நாடு கடத்தல் ஒப்பந்தம் படி வங்கதேசத்தில் இருக்கும் உல்பா தீவிரவாத இயக்க தலைவர் அனுப் செதியா இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்.
பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்படுவதற்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார். வங்கதேசத்துடன் நல்லுறவு வைத்திருப்பது வடகிழக்கு மாநிலங்களுக்கு மிகவும் அவசியம் என்றார். பாதுகாப்பு, எல்லைப்பிரச்சினை, பொருளாதாரம், மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அசாம், மிசோரம்,திரிபுரா உள்பட வடகிழக்கு மாநில முதல்வர்களும் சென்றுள்ளனர். பிரதமருடன் செல்ல மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி செல்ல மறுத்துவிட்டார். வங்கதேச அதிபர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முக்கிய தலைவர்களையும் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு பின்னர் வங்கதேசத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் சென்றிருப்பது முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்