முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், செப்.10 - உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் நேற்று தங்களது ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். மகாபலி சக்கரவர்த்தி கேரளத்தை சிறப்பாக ஆண்ட அசுர மன்னன். மகாபலியை அழிக்க அவதாரமெடுத்த மகாவிஷ்ணு மூன்றடி மண்ணை மகாபலியிடம் கேட்டுப் பெற்று தனது மூன்றாவது அடியிலேயே மகாபலியை அழித்தார். மகாபலி தான் இறந்த நாளை தனது நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரது கோரிக்கைப்படியே ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கமாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் மகாபலி மன்னர் மலையாளிகளின் வீடுகளுக்கு நேரில் வந்து செல்வதாக கூறப்படுகிறது. ஓணம் பண்டிகை விசேஷங்கள் 10 நாட்கள் நடைபெறுகின்றன. அத்தம் நாளில் துவங்கி திருவோணம் வரை உள்ள இந்த பத்து நாட்களும் மலையாளிகளின் வீடுகள் மற்றும் கோவில்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. மகாபலியை வரவேற்கவே இந்த வண்ணமிகு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

கேரளா மட்டும் அல்லாமல் இந்த ஓணம் பண்டிகை தமிழ்நாட்டில் கேரள மக்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மலையாளிகளும், அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகளில் உள்ள மலையாளிகளும் ஓணத்தை வெகு விமரிசையாக கொண்டாடினர். 

புத்தாடைகளை அணிந்து விருந்தினர்களை வரவேற்று உபசரித்து இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. வளமை, அமைதி, சமத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் மத இன பாகுபாடின்றி மலையாளிகள் அனைவரும் இந்த பண்டிகையை கொண்டாடினர். கடந்த சில நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்துவந்தது. ஆனால்  இந்த ஓணம் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காகவோ என்னவோ மழையின் அளவு  அனைத்து பகுதிகளிலும் குறைந்தது. இதனால் மக்கள் உற்சாகமாக ஓணத்தை கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்