முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண நிதியை தவறாக பயன் படுத்துவதாக குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, செப்.10 - முதல்வர் நிவாரண நிதியை ரங்கசாமி தவறாக பயன்படுத்துகிறார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மே 16-ந் தேதி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார். அதன் பிறகு ஜூன் 8-ந் தேதி 4 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஒரு அமைச்சர் பதவி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதேபோல காலத்தோடு கூட்ட வேண்டிய சட்டமன்ற கூட்டத்தொடரையும் முதல்வர் கூட்டவில்லை. 

இது குறித்து ஏற்கனவே நாங்கள் தெரிவித்து இருந்தோம். தற்போது இந்திராநகர் சட்டமன்ற தொகுதித்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இதனால் இந்த கூட்டத்தொடர் மக்களுக்கு பயன் அற்றதாக மாறி விட்டது. எனவே இந்த கூட்டத்தொடரை அக்டோபருக்கு பிறகு மீண்டும் கூட்ட வேண்டும். 

இது குறித்து வருகிற 12-ந் தேதி வலியுறுத்துவோம். இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான 6-ந் தேதியில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது. இதனால் அரசு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய முடியாது. புதிய திட்டம், அறிவிப்புகளையும் வெளியிட முடியாது. 

இந்த நிலையில் புதிதாக ஒரு அமைச்சரை நியமிக்க முதல்வர் முடிவு செய்தார். ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தனது அமைச்சரவையில் இடம் அளித்து இருந்தார். தேர்தலை மனதில் கொண்டு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை கவர வேண்டும் என்ற வகையில் அவரது கட்சிக்காரருக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளார். 

அவரை உடனடியாக பதவி ஏற்க செய்ய தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. 4 மாதமாக காலியாக இருந்த அமைச்சர் பதவியை இவ்வளவு வேகமாக நிரப்ப வேண்டிய அவசியம் என்ன? அமைச்சர் பதவி ஏற்பு விழாவுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் மறுபரிசீலனைசெய்ய வேண்டும். 

இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். முதல்வர் நிவாரண நிதியை ரங்கசாமி தவறாக பயன்படுத்துகிறார். இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இந்திரா நகர் தொகுதி மக்களுக்கு வீட்டுக்கு ரூ.3 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு இந்த நிதி வழங்கப்படுகிறது. 

தலைமை செயலாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்