முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை காந்திமதி மரணம்: திரையுலகத்தினர் அஞ்சலி

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.10 - நடிகை காந்திமதி நேற்று அதிகாலை 7.00 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது பூத உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த நடிகை காந்திமதி திருமணம் ஆகாதவர் இவர். பாலசுப்பிரமணியம், திகையாளன் என இரண்டு பேரை வளர்த்து வந்தார். இவர்கள் காந்திமயின் தம்பி மகன்கள். 

கடந்த 6 மாதம் காலமாக சினிமா, டி.வி. தொடர்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவர் தசரதன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவருக்கு வயது 65, ஆகும். நடிகை காந்திமதியின் உடல் நேற்று மாலை போரூரிலுள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இவரது உடலுக்கு திரையுலகத்தினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

``இவ ஆத்தாளுக்கு தாவணி போட்டா'' எப்படியிருக்கும்னு நினைச்சேன் பதினாறு  வயதினிலே படத்தில் ரஜினி இப்படி சொல்லிவிட்டு சிரிக்க, கட் ஷாட்டில் வந்து போகும் தாவணி போட்ட காந்திமதியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதன்பின் எத்தனையோ படங்கள். சுமார் 300  படங்களும்மேல் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் காந்திமதியின் முக்கியத்துவம், அவர் இந்த கேரக்டரில் நடிக்காமல் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து பார்த்தாலே சுரீரென்று புரிய வைக்கும். அப்படிப்பட்ட நடிகை இன்று நம்மிடம் இல்லை. 2000-ம் ஆண்டில் இதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட காந்திமதி அதன்பின் பெரிய அளவில் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று துவங்கி, ரஜினி, கமல் வரைக்கும் நடித்துள்ளார்.

நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் உள்பட நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

பழம்பெறும் நடிகையும் தனது நடிப்பால் தமிழக மக்களின் உள்ளங்களை கவந்தவருமான கலைமாமணி, கலைச்செல்வம் காந்திமதி மறைந்துவிட்ட செய்தி தமிழ்த் திரையுலகத்திற்கு, தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் இழப்பாகும். ஆரம்ப காலத்தில் கலைமாமணி எஸ்.வி.சகஸ்நாமம் சேவா ஸ்டேஜ் என்ற நாடக குழுவில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்து எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஜனாதிபதி விருதுபெற்ற யாருக்காக அழுதான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து நாட்டுக்கு அறிமுகமானார். அதுமுதல் ஆயிரக்கணக்கான நாடகத்திலும், நூற்றுக்கணக்கான திரைப்படத்திலும் குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களிலும், நடித்து மக்களை மகிழ்வித்த கலைஞர்களில் காந்திமதியும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது. அம்மையாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ் ரசிக பெருமக்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுடைய ஆன்மா இறைவனடியில் இளைப்பாற வேண்டுமென்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளானர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்