முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டண சேனல்கள் பெற விலை நிர்ணயக் குழு

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,செப்.11 - அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு கட்டண சேனல்களை பெற தமிழக அரசின் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பந்தப்பட்ட சேனல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் பெற்ற குழுவாகும். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 ம் தேதி தொடங்கி வைத்தார். இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் இணைந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேட்டர்களிடம் 1.45 கோடி இணைப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டி.வி. சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக இலவச சேனல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கட்டண சேனல்கள் பின்னர் அளிக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கட்டண சேனல்களை அரசு கேபிளுக்குள் கொண்டு வர தமிழக அரசு சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தனியாக விலை நிர்ணய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், அரசின் நிதித்துறை செயலாளர், தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 

கட்டண சேனல்களை பெறுவதற்கான தொடர் பேச்சுவார்த்தையை அரசின் சார்பில் இந்த விலை நிர்ணய குழு மேற்கொள்ளும். கட்டண சேனல்களின் நிறுவனங்களுடன் இந்த குழுவின் பேச்சுவார்த்தை ஓரிரு மாதங்களில் முடியும் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் விரும்பும் சேனல்கள் தங்களது கேபிள் டி.வியில் விரைவில் தெரியும் என்று அரசு துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்