முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாகயுள்ள 28,596 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 12 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.13- தாய், சேய் நலம் காப்பதில் தமிழகம் முதலிடமாக திகழ்கிறது என்றும், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 28,596 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும்  முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே ​என்று குழந்தைகளைப் பற்றி பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவர்.  சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை எவ்வித இடர்ப்பாடும் இன்றி பெற்று மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளே வளமான மற்றும் வலிமையான தலைமுறையினராக உருவாகின்றனர்.    

தமிழகத்தில் உள்ள, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்,  மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோர் இடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதனை அகற்றி, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2002 ஆம் ஆண்டு எனது அரசால்  செயல் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில், ஒரு புதிய கொள்கை வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பல உதவிகள் வழங்கப்படுகின்றன. 6 மாதம் முதல் 36 மாதம் முடிய உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு வழங்குதல், 2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தல், முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு மதிய உணவு அளித்தல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், உயர் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைத்தல், பள்ளிசாரா முன்பருவக் கல்வி அளித்தல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி அளித்தல், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைக் கல்வி வழங்குதல்  ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வருடத்தில் 300 நாட்களுக்கு செரிமானத் தன்மை ​அமிலேஸ் நிறைந்த இணை உணவு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், பல்வேறு நிலையில் உள்ள பயனாளிகளுக்கு இணை உணவு வழங்க 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும்,  முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், புரதச் சத்து மிக்க, சத்தான, சூடான, மதிய உணவு அனைத்து மையங்களிலும் வருடத்தில் 365 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.  இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டும் தான், ஓய்வூதியம் பெறும் முதியோர்களுக்கு சமைக்கப்பட்ட சூடான, மதிய உணவு குழந்தைகள் மையத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் முதியோர் உள்ளிட்ட 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறும் குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும்; மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்; பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும்; எனது அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சொந்தக் கட்டடங்களில் செயல்படும் சிறிய பழுதுகளுடன் உள்ள 10,372 மையங்கள் மற்றும் பெரிய பழுதுகளுடன் உள்ள 7,449 மையங்கள், ஆக, பழுதுபட்டுள்ள மொத்தம் 17,821 மையங்களும் இந்த ஆண்டே 47 கோடியே, 61 லட்சம் ரூபாய் செலவில் பழுது நீnullக்கி சீரமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் மையங்களுக்கு, ஆர்வமுடன் குழந்தைகள் வருவதற்கும்; விளையாட்டு சாதனங்கள் வாயிலாக  முன்பருவக் கல்வி பயில்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இம்மையங்களில் கோடைக் காலத்தில் வெப்பத்தினாலும்; மழை மற்றும் குளிர் காலங்களில் போதிய வெளிச்சம் இன்மையாலும் குழந்தைகள் அவதியுறாமல் இருக்கும் வகையில், மின்விசிறி மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர எனது அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மின்வசதி இல்லாத 45,345 குழந்தைகள் மையங்களில், 27 கோடியே, 21 லட்சம் ரூபாய் செலவில், உட்புற மின் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன் மின் விசிறி மற்றும் மின் விளக்கு ஆகியவை பொருத்தப்படும்.       

சுற்றுச்சூழல் மாசு காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணவும்; குழந்தைகளிடம் இளம் வயதிலேயே கழிப்பறையைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கவும்; குழந்தைகள் மையங்களில் குழந்தை நேயக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். இக்கழிப்பிடங்கள், குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் வடிவமைக்கப்படும். இதற்காக, இந்த ஆண்டு 23 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் 29,727 குழந்தைகள் மையங்களில் குழந்தைகள் நேயக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 28,596 பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்தக் காலிப் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு, எனது அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளாலும்; செயல்படுத்தி வரும் திட்டங்களாலும்; தாய், சேய் நலம் காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்