முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே மீது விசாரணை நடத்த தமிழ் அமைப்புகள் மனு

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 21 - லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை  கொன்று குவித்த ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தியே தீர வேண்டும் என்று சென்னையில் உள்ள ஐ.நா. பிரதிநிதிகளிடம் தமிழ் அமைப்புகள் மனு கொடுத்துள்ளன.

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிற 23-ந் தேதி ஐ.நா.சபையில் உரையாற்றுகிறார்.  இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ராஜபக்சேவுக்கு எதிரான கண்டன குரல்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.  உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆங்காங்கு அவருக்கு எதிராக போராட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறில் ஐ.நா. சபையின் ஒர் அங்கமான யூனிசெப் அமைப்பு உள்ளது.  இந்த அலுவலகத்திற்கு இன்று காலை பல்வேறு தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்  வந்தனர்.  அங்கிருந்த ஐ.நா. பிரதி நிதிகளிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.

இலங்கையில் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும்,அங்குள்ள கொடிய சித்ரவதை சிறைகளில் உள்ள இளைஞர்களையும் விடுவித்து அவரவர் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் அங்கு கவுரவமான  வாழ்க்கையைத் தொடங்க உரிய நடவடிக்கையை ஐ.நா. எடுக்க வேண்டும்.  தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.

தமிழர் பகுதிகளில் வேகவேகமாக குடியமர்த்தப்பட்ட சிங்களர்களை வெளியேற்ற  வேண்டும்.  அங்கு நடந்த போர்க்குற்றங்களை அந்த நாட்டு அரசே விசாரித்தால் நீதி கிடைக்காது.  சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை நடந்த வேண்டும்.  சேனல் - 4 மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் வெளியிட்ட ஆதாரங்களை இந்த விசாரணைக்கு உரிய ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.  தமிழர் பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.  சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற வேண்டும்.

மேற்கண்ட  இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு வெளியேற்றாதபடி, ஐ.நா. சபை பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட ஐ.நா. பிரதிநிதிகள் இம்மனுவை உரியவர்களிடம் சேர்ப்போம் என்று உறுதியளித்தனர்.

திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்(ஒருங்கிணைப்பாளர் கருத்துரிமை இயக்கம்), ஈஸ்வரன் (ம.தி.மு.க), கோவிந்தன் (தமிழ் தேசிய இயக்கம்)  உமர் (மே 17 இயக்கம்), டார்வின் தாசன் (பெரியார் தி.க.), பார்த்திபன் (அம்பேத்கர் சிறுத்தைகள்), விஜய் சங்கர் அசோகன் (நார்வே தமிழப் பேரவை), கதிரவன், வழக்கறிஞர் ரமணி உள்பட ஏராளமானோர் இம்மனு கொடுப்பதற்கு வந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்